'கண்டுபிடிக்கப்பட்ட கற்கால ஆயுதங்கள்'
மேற்கண்ட கற்கால ஆயுதங்களை யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களால் கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட முக்கிய வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.
'தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்'
இது பற்றி அகழ்வாராச்சியாளர் ப.புஷ்பரட்ணம் அவர்கள் வணக்கம் லண்டன் என்னும் தமிழ் இணையத்தள செய்தி ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில்,
"பனிக்கன்குளத்தில் வாழ்ந்து வரும் திரு.கஜன், திரு.ஜெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை அவருக்கு அனுப்பியிருந்தனர். இக்கருங்கலின் வடிவமைப்பும் அதன் பயன்பாட்டு நோக்கமும் மிகவும் பழமைவாய்ததாகக் காணப்பட்டதால் அவ்விடத்திற்குத் தொல்லியல் விரிவுரையாளர் திரு. க.கிரிகரனுடன் இவ்வாரம் சென்றிருந்தோம் அவ்விடத்திற்குச் செல்வதற்கான உதவிகளை திரு.கஜன், திரு.ஜெயகாந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
'தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய கருங்கல்'
தற்போதைய இக்காட்டு இடத்தில் முக்கிய வீதிக்கு ஒரு மையில் சுற்றுவட்டத்திலேயே சில குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஏனைய பிரதேசம் வன்னேரிக்குளம் வரை மக்கள் வாழ முடியாத அடந்த காடாகவே காணப்படுகின்றது. ஆயினும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செறிவான மக்கள் குடியிருப்புகள் இருந்ததை உறுதிப்படுத்தும் நம்பகரமான தொல்லியற் சான்றுகள் ஆற்றின் இரு மருங்கிலும் செறிவாகக் காணப்படுகின்றன. அவற்றுள் பல அளவுகளில், பல வடிவங்களில் செய்யப்பட்ட மட்பாண்ட ஓடுகள், செங்கற்கள், இரும்பு படிமங்கள், கருங்கற்களில் வடிவமைக்கப்பட்ட பாவனைப் பொருட்கள் முதலியன ஆற்றையண்டிய மேட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்க முடிந்தது. இவ்வாதாரங்கள் ஈழத்தில் கந்தரோடை, கட்டுக்கரைக்குளம், அநுராதபுரம் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், அரிக்கமேடு ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதியிரும்புக்கால (பெருங்கற்கால) பண்பாட்டுக்குரிய சான்றாதரங்களை நினைவு படுத்துவதாக உள்ளன.
'கற்கால மக்களின் உடைந்த எச்சங்கள்'
'அவர்கள் வாழ்ந்த பகுதிகள்'
ஆயினும் இவ்விடத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் நிரந்தரமான குடியிருப்புகள் தோன்றுவதற்கு முன்னர் நாடோடிகளாக உணவுக்காக மிருகங்களை வேண்டியாடி வாழ்ந்த கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இங்கு கிடைத்திருப்பது முக்கிய விடயமாக காணப்படுகின்றது. அவற்றை உறுதிப்படுத்தும் நம்பகரமான சான்றுகளாக குவாட்ஸ், சேட் கற்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட சிறுதொழிட்பத்துடன் கூடிய கற்கருவிகளும், கருவிகளை வடிவமைக்கும் போது ஏற்பட்ட கற்களின் பாகங்களும் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதரங்கள் இவ்விடத்தில் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இடைக்கற்கால அல்லது நுண்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் பழங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தனர் எனக் கூறப்பட்டலும் இடைக்கற்கால அல்லது நுண்கற்காலப் பண்பாடிலிருந்தே மனித வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும் தொடர்ச்சியாக அறிய முடிகின்றது. அவற்றுள் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றிய நுண்கற்காலப் பண்பாடு (இடைக்கற்காலப் பண்பாடு) இற்றைக்கு 37000 ஆண்டிலிருந்து 3000 ஆண்டுகள் நிலவியதாகவும், நிலையான குடியிருப்புக்களைக் கொண்ட நாகரிக வரலாற்றுக்கு வித்திட்ட பெருங்கற்காலப் பண்பாடு இற்றைக்கு 3000 ஆண்டிலிருந்து 1700 வரை நிலவியதாகவும் காலங்கள் கணிப்பிடப்பட்டுள்ளன.
இவ்விரு பண்பாடுகளும், அப்பண்பாடுகளுக்குரிய மக்களும் தென்தமிழகத்தில் இருந்தே புலம்பெயர்ந்து வந்தவை என்பது தொல்லியலாளர்களின் கருத்தாகும். தற்போது அவ்விரு பண்பாடுகளுக்கும் உரிய சான்றாதாரங்கள் பனிக்கன்குளக் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை வட ஈழத்தின் பூர்வீக வரலாற்றுக்கு புதிய செய்தியைச் சொல்வதாக உள்ளது. இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இவ்விடத்தை தொல்லியல் மையமாகப் அறிவிக்குமாறு இலங்கைத் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.''
என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: ப. புஷ்பரட்ணம்
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட இலங்கையில் உள்ள மாங்குளம், முருங்கன், கிளிநொச்சி (இரணைமடு) முதலான இடங்களில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட சரசின், செலிக்மன், வேலண்ட, போல், பர்சனர் காட்லே முதலானோர் இங்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
'கலாநிதி திரணியகல'
ஆயினும் நீண்ட காலமாக இக்கருத்துக்களுக்கு இலங்கை வரலாறு பற்றிய ஆய்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் 1970 களின் பின்னர் இலங்கைத் தொல்லியற் திணைக்களம் குறிப்பாக இலங்கையின் முதன்மை தொல்லியலாளரில் ஒருவரான கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகள் இக்கருத்துக்களுக்குப் புதுவெளிச்சத்தை ஏற்படுத்தியதெனக் கூறலாம். அவர் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் போது கிடைத்த ஆதாரங்களில் இருந்து இற்றைக்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியத்தில் கற்கால மக்கள் (மேலைப்பழங்கற்கால மக்கள் - Upper Palaeolithic People) வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இம்மக்கள் நாடோடிகளாக மிருகங்களை வேட்டையாடியும், இயற்கையாகக் கிடைத்த பழங்களையும், கிழங்கு வகைகளையும், காய்கனிகளையும் உண்டும் வாழ்ந்து வந்தனர் என்பதை இங்கு கிடைத்த கல்லாயுதங்கள் உறுதிசெய்கின்றன. இவ்வாதாரங்கள் இலங்கையின் முதலாதவது மனித குடியிருப்பின் தொடக்கப் புள்ளியாக இரணைமடுவை அடைளாளப்படுத்தியதன் மூலம் கிளிநொச்சியின் வரலாற்றுத் தொன்மை வெளிச்சத்திற்கு வந்தது.
கிளிநொச்சியில் (பூநகரியில்) மண்டக்கல் மற்றும் மண்ணியாற்றுப் பகுதியில் 1982,1993 காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய பலதரப்பட்ட கற்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இக்கட்டுரை ஆசிரியர் தொல்லியல் மாணவர்களுடன் இணைந்து பூநகரி கல்முனைப்பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய குவாட்ஸ், சேட் வகையைச் சார்ந்த கற்கருவிகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. இக்கருவிகள் முன்னர் இரணைமடுப் பகுதியில் வாழ்ந்த கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகளை விட கூடிய தொழில் நுட்பமும், கலைநயமும் பொருந்தியதுடன் ஒரளவு நாகரிகமுடைய மக்களாகவும் இங்கு இருந்துள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.
மானிடவியல் அறிஞர்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த இந்நுண்கற்கால, மக்கள் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். தொல்லியலாளர் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நுண்கற்காலக் கருவிகளுக்கும் கர்நாடகம் உட்பட தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிலும் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரு பக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள் தமிழகத்தில் பாம்பன் கடற்கரைக்கு அண்மையில் உள்ள தேரிக் கலாச்சாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமை கொண்டுள்ளதாக அல்ஜின் குறிப்பிடுகிறார். மொழியியலாளர் மொழி அடிப்படையில் இலங்கை தென்னிந்திய நுண்கற்கால மக்களிடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வொற்றுமைகளின் அடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் தென்னிந்தியா அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தேரி மணற்குன்றுப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தனர் எனக் கூறப்படுகிறது. கலாநிதி இந்திரபாலா வடஇலங்கை அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு தமிழகத்தின் தொடக்க வாயிலாக இருப்பதால் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த இம்மக்கள் முதலில் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலேயே குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.
இந்நுண்கற்கால மக்களைத் தொடர்ந்து கி.மு.1000 அளவில் இலங்கை நாகரீகத்திற்கு வித்திட்ட பெருங்கற்கால தமிழ் மக்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் ஏறத்தாள 50க்கும் மேற்பட்ட தொல்லியல் மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தென்னிலங்கையில் அநுராதபுரமும், வட இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி மற்றும் கந்தரோடை என்பன மிகப்பெரிய பெருங்கற்கால குடியிருப்பு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு மிகப்பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்ததினால் இப்பண்பாடு பெருங்கற்காலப் பண்பாடு என அழைக்கப்பட்டது.
ஆனால் பெரிய கற்கள் காணப்படாத இடங்களில் மிகப் பெரிய தாழிகளை அமைத்து அதற்குள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் மரபு காணப்பட்டது. வட இலங்கையில் இந்த இருவகை ஈமச் சின்னங்களும் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப்பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும், அவர்களது குடியிருப்பு பகுதிகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்பண்பாட்டுடன் தான் தென்னிந்தியாவைப் போல் இலங்கையிலும் நிலையான குடியிருப்புக்கள், நீர்ப்பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்களின் (Black and Red Wares) பயன்பாடு, மந்தை வளர்ப்பு, சிறு தொழில் நுட்ப வளர்ச்சி அரச தோற்றம், நகரமயமாக்கம், சமூக உருவாக்கம் என்பன தோன்றியமை தெரியவந்துள்ளது. இதன் மூலம் இதுவரை காலமும் இலங்கையின் மனித வரலாறும், நாகரீக உருவாக்கமும் வடஇந்தியாவில் இருந்து கி.மு 6ஆம் நூற்றாண்டில் விஜயன் தலமையில் ஏற்பட்ட குடியேற்றத்துடன் தோன்றியதென்ற பாரம்பரிய கருத்து மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
'இரணைமடுவில் கண்டுபிடிக்கப்ட்ட பெருங்கற்கால ஆயுதங்கள்'
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு நுண்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து அதில் இரைணைமடு முக்கிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அங்கு இதுவரை முழுமையான அகழ்வாய்வு மேற்கொள்ளப்படாத நிலையிலும் இரணைமடுக் குளத்திற்கு கிழக்காக உள்ள மேட்டுநிலப் பகுதியில் இருந்து இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் தாழிகளின் உடைந்த பாகங்கள், கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள், கழிவிரும்புகள், கல்மணிகள், சுடுமண் உருவங்கள் என்பன கிடைத்துள்ளன. இங்கு விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்படுமானால் இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களது பண்பாட்டின் பல சிறப்புக்கள் வெளிவரும் எனலாம்.
இலங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத்திட்டத்தில் உள்ள காணி 1990 அளவில் பயிர்ச்செய்கைக்காகத் திருத்தப்பட்ட போது எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும் தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன. இது பற்றிய செய்தி அப்போதைய உதவி அரசாங்க அதிபராக இருந்த கலாநிதி .க.குணராசா அவர்களுக்குத் தெரியப்படுத்திய போது அவர் நேரில் சென்று அவற்றைப் பார்வையிட்டதுடன் அத்தாழிகள் பற்றியும் விரிவான கட்டுரையை எழுதியிருந்தார்.
வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி என்ற வகையில் இதற்குத் தனி முக்கியத்துவம் உண்டு. நான்கடி உயரமும், எட்டடி சுற்றுவட்டமும் கொண்ட இத்தாழியின் விளிம்பு ஓரங்குலத் தடிப்புடையது. தாழியின் வெளிப்புறத்தில் சில அலங்காரக் கோடுகள் காணப்படுகின்றன. தாழிக்குள் மனித எலும்புக் கூட்டின் சில பாகங்களும், சாம்பல் போன்ற கரிய பொருள், இரு மட்கலங்கள் என்பன காணப்பட்டன. இப்பொருட்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தாழி காணப்பட்ட வயற்பரப்பின் ஓரங்களில் காணப்படும் உடைந்த தாழிகளையும், பலவகைப்பட்ட மட்பாண்டங்களையும் நோக்கும் போது இங்கு பொம்பரிப்பு போன்ற பெருங்கற்கால ஈமத்தாழி மையம் இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது.
'இரணைமடு பெருங்கற்கால அகழாய்விடம்'
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்த அளவில் பெருங்கற்கால குடியிருப்புக்கள் இருந்த பிராந்தியமாகப் பூநகரி காணப்படுகிறது. 1980 களில் கலாநிதி இரகுபதியும், 1990-94, 2004-2005 காலப்பகுதியில் இக்கட்டுரை ஆசிரியரும் இங்கு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் போது கல்முனை தொட்டு நாச்சிக்குடா வரையுள்ள கடற்கரை சார்ந்த பிரதேசத்தில் நுண்கற்காலம் தொட்டு தற்காலம் வரை வாழ்ந்து வரும் மக்களது பலதரப்பட்ட பண்பாட்டுச் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவற்றுள் பெருங்கற்காலக் குடியிருப்புக்கள், ஈமச் சின்னங்கள் தொடர்பாகக் கிடைத்த சான்றுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சான்றுகள் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் விமலாபேக்கிலே என்ற அறிஞர் கந்தரோடை தொட்டு புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு வரை தென்னிந்தியா குறிப்பாகத் தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலத் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறிய கருத்தை உறுதி செய்வதாக உள்ளது.
கி.மு. 5/ 6 ஆம் நூற்றாண்டு என்று கணிகப்பட்டுள்ள தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட ஓர் மட்பாண்டம். இவ்மட்பாண்டமானது 1970 ஆண்டு காலப்பகுதியில் அநுராதபுரத்தில் கண்டெடுக்கபட்டுள்ளது!
உசாத்துணை
No comments:
Post a Comment