Thursday, 11 May 2023

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்.!

 ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்.!

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார்.

இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தெற்காசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது.

நாகங்கள் பூமிக்குள் இருந்து வந்து, மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதனால், ஆதி காலத்து மக்கள் அவற்றை மண் புற்றுக்குள் வைத்து வழிபாடுகளை நடத்தியுள்ளமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

கட்டுக்கரை மற்றும் நாகபடுவான் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆகழ்வாய்வுகளின் போதே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த ஆதாரங்களின் ஊடாக வட இலங்கை மக்கள், நாக வழிபாட்டை குல வழிபாடாக கொண்டிருந்தமை உறுதிப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கிளிநொச்சி – பூநகரி பகுதியிலுள்ள முழங்காவில் நகருக்கு அண்மையிலேயே இந்த பகுதிகளில் அமையப் பெற்றுள்ளன.

நாகபடுவான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாக வழிபாட்டு சான்றுகளில் சில, தெற்காசிய நாடுகளில் இதுவரை கிடைக்கவில்லை என பேராசிரியர் கூறுகின்றார்.

நாகபடுவான் – ஊரின் பெயர்

நாகபடுவான் என்ற பெயரில் நாகம் இருப்பதுடன், படுவம், படுவான் என்றால் ஆழமான குளம் அல்லது பெரிய குளம் என பொருட்படுகின்றது என கூறப்படுகின்றது.

இதன்படி, நாககுளம் என்ற பொருளை கொண்ட இந்த ஊரின் பெயர் மாற்றம் பெறாது, பண்டைய தமிழ்ச் சொல்லிலேயே நாகபடுவான் என அழைக்கப்படுவதாக பேராசிரியர் விளக்கமளிக்கின்றார்.

குறித்த இடத்திலிருந்து ஆதிகால பண்பாட்டுச் சின்னங்கள், சுடுமண்ணிலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாகம், நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கள் உள்ளிட்ட பழமை வாய்ந்த அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆதாரங்கள், ஆதிகால மக்கள் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அத்துடன், நாகச் சிற்பத்தை பானையில் வைத்து வழிபட்டமைக்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்கு புதிய விடயங்களாக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.

குறித்த அகழ்வு குழியொன்றிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட, அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பெரிய பானை, மண்ணில் புதைக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் பாம்பு வந்து போவதற்கான வாய்ப் பகுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், அந்த பானையைச் சுற்றி மூடிய நிலையில் பாம்பு புற்றை அடையாளப்படுத்தும் 4 சிறு கலசங்களும் காணப்படவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பானையிலிருந்து மண் அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போது, நாக பாம்பின் சிலை பானையால் மூடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பானையின் மூன்று திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அவற்றில் அமர்ந்துள்ள தெய்வங்களின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது.

நான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகபாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது.

இந்த ஆதாரங்கள் பாம்பு புற்று வழிபாடு தோன்றுவதற்கு முன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோன்றிய தொன்மையான வழிபாட்டு மரபு எனக் கூறலாம் என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், ஒன்று மேற்பட்ட நாக வடிவங்கள், மண் சட்டிகளில் வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

நாக வழிபாட்டு ஆலயங்களில் நாகதோஷம் நீங்க செப்பு அல்லது மண் பாத்திரங்களில் நாக பாம்பை வைத்து ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபு ஆதிகாலத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என பேராசிரியர் கருதுகிறார்.

திருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரம் நகருக்கு வட பகுதியிலுள்ள பிராந்தியம், நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த பெயர்கள் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15ஆம் நூற்றாண்டில் யாழ்பாணம், பட்டினம் என்ற பெயரும் தோன்றும்வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

பண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும், அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக் கூறப்பட்டு வந்ததற்கு தற்காலத்தில் வடஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததையே கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றது எனலாம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.


'கண்டுபிடிக்கப்பட்ட கற்கால ஆயுதங்கள்'

மேற்கண்ட கற்கால ஆயுதங்களை யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களால் கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட முக்கிய வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.

'தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்'

இது பற்றி அகழ்வாராச்சியாளர் ப.புஷ்பரட்ணம் அவர்கள் வணக்கம் லண்டன் என்னும் தமிழ் இணையத்தள செய்தி ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில்,

"பனிக்கன்குளத்தில் வாழ்ந்து வரும் திரு.கஜன், திரு.ஜெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை அவருக்கு அனுப்பியிருந்தனர். இக்கருங்கலின் வடிவமைப்பும் அதன் பயன்பாட்டு நோக்கமும் மிகவும் பழமைவாய்ததாகக் காணப்பட்டதால் அவ்விடத்திற்குத் தொல்லியல் விரிவுரையாளர் திரு. க.கிரிகரனுடன் இவ்வாரம் சென்றிருந்தோம் அவ்விடத்திற்குச் செல்வதற்கான உதவிகளை திரு.கஜன், திரு.ஜெயகாந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

'தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய கருங்கல்'

தற்போதைய இக்காட்டு இடத்தில் முக்கிய வீதிக்கு ஒரு மையில் சுற்றுவட்டத்திலேயே சில குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஏனைய பிரதேசம் வன்னேரிக்குளம் வரை மக்கள் வாழ முடியாத அடந்த காடாகவே காணப்படுகின்றது. ஆயினும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செறிவான மக்கள் குடியிருப்புகள் இருந்ததை உறுதிப்படுத்தும் நம்பகரமான தொல்லியற் சான்றுகள் ஆற்றின் இரு மருங்கிலும் செறிவாகக் காணப்படுகின்றன. அவற்றுள் பல அளவுகளில், பல வடிவங்களில் செய்யப்பட்ட மட்பாண்ட ஓடுகள், செங்கற்கள், இரும்பு படிமங்கள், கருங்கற்களில் வடிவமைக்கப்பட்ட பாவனைப் பொருட்கள் முதலியன ஆற்றையண்டிய மேட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்க முடிந்தது. இவ்வாதாரங்கள் ஈழத்தில் கந்தரோடை, கட்டுக்கரைக்குளம், அநுராதபுரம் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், அரிக்கமேடு ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதியிரும்புக்கால (பெருங்கற்கால) பண்பாட்டுக்குரிய சான்றாதரங்களை நினைவு படுத்துவதாக உள்ளன.

'கற்கால மக்களின் உடைந்த எச்சங்கள்'

'அவர்கள் வாழ்ந்த பகுதிகள்'

ஆயினும் இவ்விடத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் நிரந்தரமான குடியிருப்புகள் தோன்றுவதற்கு முன்னர் நாடோடிகளாக உணவுக்காக மிருகங்களை வேண்டியாடி வாழ்ந்த கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இங்கு கிடைத்திருப்பது முக்கிய விடயமாக காணப்படுகின்றது. அவற்றை உறுதிப்படுத்தும் நம்பகரமான சான்றுகளாக குவாட்ஸ், சேட் கற்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட சிறுதொழிட்பத்துடன் கூடிய கற்கருவிகளும், கருவிகளை வடிவமைக்கும் போது ஏற்பட்ட கற்களின் பாகங்களும் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதரங்கள் இவ்விடத்தில் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இடைக்கற்கால அல்லது நுண்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில் பழங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தனர் எனக் கூறப்பட்டலும் இடைக்கற்கால அல்லது நுண்கற்காலப் பண்பாடிலிருந்தே மனித வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும் தொடர்ச்சியாக அறிய முடிகின்றது. அவற்றுள் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றிய நுண்கற்காலப் பண்பாடு (இடைக்கற்காலப் பண்பாடு) இற்றைக்கு 37000 ஆண்டிலிருந்து 3000 ஆண்டுகள் நிலவியதாகவும், நிலையான குடியிருப்புக்களைக் கொண்ட நாகரிக வரலாற்றுக்கு வித்திட்ட பெருங்கற்காலப் பண்பாடு இற்றைக்கு 3000 ஆண்டிலிருந்து 1700 வரை நிலவியதாகவும் காலங்கள் கணிப்பிடப்பட்டுள்ளன.

இவ்விரு பண்பாடுகளும், அப்பண்பாடுகளுக்குரிய மக்களும் தென்தமிழகத்தில் இருந்தே புலம்பெயர்ந்து வந்தவை என்பது தொல்லியலாளர்களின் கருத்தாகும். தற்போது அவ்விரு பண்பாடுகளுக்கும் உரிய சான்றாதாரங்கள் பனிக்கன்குளக் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை வட ஈழத்தின் பூர்வீக வரலாற்றுக்கு புதிய செய்தியைச் சொல்வதாக உள்ளது. இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இவ்விடத்தை தொல்லியல் மையமாகப் அறிவிக்குமாறு இலங்கைத் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.''

என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: ப. புஷ்பரட்ணம்


19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட இலங்கையில் உள்ள மாங்குளம், முருங்கன், கிளிநொச்சி (இரணைமடு) முதலான இடங்களில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட சரசின், செலிக்மன், வேலண்ட, போல், பர்சனர் காட்லே முதலானோர் இங்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

'கலாநிதி திரணியகல'

ஆயினும் நீண்ட காலமாக இக்கருத்துக்களுக்கு இலங்கை வரலாறு பற்றிய ஆய்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் 1970 களின் பின்னர் இலங்கைத் தொல்லியற் திணைக்களம் குறிப்பாக இலங்கையின் முதன்மை தொல்லியலாளரில் ஒருவரான கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகள் இக்கருத்துக்களுக்குப் புதுவெளிச்சத்தை ஏற்படுத்தியதெனக் கூறலாம். அவர் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் போது கிடைத்த ஆதாரங்களில் இருந்து இற்றைக்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியத்தில் கற்கால மக்கள் (மேலைப்பழங்கற்கால மக்கள் - Upper Palaeolithic People) வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இம்மக்கள் நாடோடிகளாக மிருகங்களை வேட்டையாடியும், இயற்கையாகக் கிடைத்த பழங்களையும், கிழங்கு வகைகளையும், காய்கனிகளையும் உண்டும் வாழ்ந்து வந்தனர் என்பதை இங்கு கிடைத்த கல்லாயுதங்கள் உறுதிசெய்கின்றன. இவ்வாதாரங்கள் இலங்கையின் முதலாதவது மனித குடியிருப்பின் தொடக்கப் புள்ளியாக இரணைமடுவை அடைளாளப்படுத்தியதன் மூலம் கிளிநொச்சியின் வரலாற்றுத் தொன்மை வெளிச்சத்திற்கு வந்தது.

கிளிநொச்சியில் (பூநகரியில்) மண்டக்கல் மற்றும் மண்ணியாற்றுப் பகுதியில் 1982,1993 காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய பலதரப்பட்ட கற்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இக்கட்டுரை ஆசிரியர் தொல்லியல் மாணவர்களுடன் இணைந்து பூநகரி கல்முனைப்பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய குவாட்ஸ், சேட் வகையைச் சார்ந்த கற்கருவிகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. இக்கருவிகள் முன்னர் இரணைமடுப் பகுதியில் வாழ்ந்த கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகளை விட கூடிய தொழில் நுட்பமும், கலைநயமும் பொருந்தியதுடன் ஒரளவு நாகரிகமுடைய மக்களாகவும் இங்கு இருந்துள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.

மானிடவியல் அறிஞர்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த இந்நுண்கற்கால, மக்கள் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். தொல்லியலாளர் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நுண்கற்காலக் கருவிகளுக்கும் கர்நாடகம் உட்பட தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிலும் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரு பக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள் தமிழகத்தில் பாம்பன் கடற்கரைக்கு அண்மையில் உள்ள தேரிக் கலாச்சாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமை கொண்டுள்ளதாக அல்ஜின் குறிப்பிடுகிறார். மொழியியலாளர் மொழி அடிப்படையில் இலங்கை தென்னிந்திய நுண்கற்கால மக்களிடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வொற்றுமைகளின் அடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் தென்னிந்தியா அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தேரி மணற்குன்றுப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தனர் எனக் கூறப்படுகிறது. கலாநிதி இந்திரபாலா வடஇலங்கை அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு தமிழகத்தின் தொடக்க வாயிலாக இருப்பதால் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த இம்மக்கள் முதலில் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலேயே குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.

இந்நுண்கற்கால மக்களைத் தொடர்ந்து கி.மு.1000 அளவில் இலங்கை நாகரீகத்திற்கு வித்திட்ட பெருங்கற்கால தமிழ் மக்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் ஏறத்தாள 50க்கும் மேற்பட்ட தொல்லியல் மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தென்னிலங்கையில் அநுராதபுரமும், வட இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி மற்றும் கந்தரோடை என்பன மிகப்பெரிய பெருங்கற்கால குடியிருப்பு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு மிகப்பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்ததினால் இப்பண்பாடு பெருங்கற்காலப் பண்பாடு என அழைக்கப்பட்டது.

ஆனால் பெரிய கற்கள் காணப்படாத இடங்களில் மிகப் பெரிய தாழிகளை அமைத்து அதற்குள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் மரபு காணப்பட்டது. வட இலங்கையில் இந்த இருவகை ஈமச் சின்னங்களும் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப்பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும், அவர்களது குடியிருப்பு பகுதிகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்பண்பாட்டுடன் தான் தென்னிந்தியாவைப் போல் இலங்கையிலும் நிலையான குடியிருப்புக்கள், நீர்ப்பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்களின் (Black and Red Wares) பயன்பாடு, மந்தை வளர்ப்பு, சிறு தொழில் நுட்ப வளர்ச்சி அரச தோற்றம், நகரமயமாக்கம், சமூக உருவாக்கம் என்பன தோன்றியமை தெரியவந்துள்ளது. இதன் மூலம் இதுவரை காலமும் இலங்கையின் மனித வரலாறும், நாகரீக உருவாக்கமும் வடஇந்தியாவில் இருந்து கி.மு 6ஆம் நூற்றாண்டில் விஜயன் தலமையில் ஏற்பட்ட குடியேற்றத்துடன் தோன்றியதென்ற பாரம்பரிய கருத்து மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

'இரணைமடுவில் கண்டுபிடிக்கப்ட்ட பெருங்கற்கால ஆயுதங்கள்'

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு நுண்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து அதில் இரைணைமடு முக்கிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அங்கு இதுவரை முழுமையான அகழ்வாய்வு மேற்கொள்ளப்படாத நிலையிலும் இரணைமடுக் குளத்திற்கு கிழக்காக உள்ள மேட்டுநிலப் பகுதியில் இருந்து இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் தாழிகளின் உடைந்த பாகங்கள், கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள், கழிவிரும்புகள், கல்மணிகள், சுடுமண் உருவங்கள் என்பன கிடைத்துள்ளன. இங்கு விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்படுமானால் இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களது பண்பாட்டின் பல சிறப்புக்கள் வெளிவரும் எனலாம்.

இலங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத்திட்டத்தில் உள்ள காணி 1990 அளவில் பயிர்ச்செய்கைக்காகத் திருத்தப்பட்ட போது எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும் தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன. இது பற்றிய செய்தி அப்போதைய உதவி அரசாங்க அதிபராக இருந்த கலாநிதி .க.குணராசா அவர்களுக்குத் தெரியப்படுத்திய போது அவர் நேரில் சென்று அவற்றைப் பார்வையிட்டதுடன் அத்தாழிகள் பற்றியும் விரிவான கட்டுரையை எழுதியிருந்தார்.

வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி என்ற வகையில் இதற்குத் தனி முக்கியத்துவம் உண்டு. நான்கடி உயரமும், எட்டடி சுற்றுவட்டமும் கொண்ட இத்தாழியின் விளிம்பு ஓரங்குலத் தடிப்புடையது. தாழியின் வெளிப்புறத்தில் சில அலங்காரக் கோடுகள் காணப்படுகின்றன. தாழிக்குள் மனித எலும்புக் கூட்டின் சில பாகங்களும், சாம்பல் போன்ற கரிய பொருள், இரு மட்கலங்கள் என்பன காணப்பட்டன. இப்பொருட்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தாழி காணப்பட்ட வயற்பரப்பின் ஓரங்களில் காணப்படும் உடைந்த தாழிகளையும், பலவகைப்பட்ட மட்பாண்டங்களையும் நோக்கும் போது இங்கு பொம்பரிப்பு போன்ற பெருங்கற்கால ஈமத்தாழி மையம் இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது.

'இரணைமடு பெருங்கற்கால அகழாய்விடம்'

கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்த அளவில் பெருங்கற்கால குடியிருப்புக்கள் இருந்த பிராந்தியமாகப் பூநகரி காணப்படுகிறது. 1980 களில் கலாநிதி இரகுபதியும், 1990-94, 2004-2005 காலப்பகுதியில் இக்கட்டுரை ஆசிரியரும் இங்கு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் போது கல்முனை தொட்டு நாச்சிக்குடா வரையுள்ள கடற்கரை சார்ந்த பிரதேசத்தில் நுண்கற்காலம் தொட்டு தற்காலம் வரை வாழ்ந்து வரும் மக்களது பலதரப்பட்ட பண்பாட்டுச் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவற்றுள் பெருங்கற்காலக் குடியிருப்புக்கள், ஈமச் சின்னங்கள் தொடர்பாகக் கிடைத்த சான்றுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சான்றுகள் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் விமலாபேக்கிலே என்ற அறிஞர் கந்தரோடை தொட்டு புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு வரை தென்னிந்தியா குறிப்பாகத் தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலத் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறிய கருத்தை உறுதி செய்வதாக உள்ளது.


கி.மு. 5/ 6 ஆம் நூற்றாண்டு என்று கணிகப்பட்டுள்ள தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட ஓர் மட்பாண்டம். இவ்மட்பாண்டமானது 1970 ஆண்டு காலப்பகுதியில் அநுராதபுரத்தில் கண்டெடுக்கபட்டுள்ளது!

உசாத்துணை

மனித நாகரிகத்தின் தொன்ம வரலாற்றை வரலாற்று காலம் என தொல்லியல் வரலாற்றாரச்சியாளர்கள் பகுத்துள்ளனர்.

1.பழங் கற்காலம்

2.புதிய கற்காலம்

3.இடைகற்காலம்

4.பெருங்கற்காலம்

என வரையறுக்கப் பட்டுள்ளது.

பழங் கற்கால பண்பாட்டில் கற்பாறைகளின் பயன் பாடும் கல்லாயுதங்களும் முக்கியப்பட இடை கற்காலம் புதிய கற் காலம் ஆகியவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகளையும் வெளிப்படுத்துவனவாக பாறை ஓவியங்களும் வேட்டை கருவிகளும் உலகெங்கும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

புதிய கற்கால ஓவியங்கள் இத்தகய ஓவியங்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

'புதிய கற்கால ஓவியங்கள்'

பெருங்கற்கால மக்களின் வாழ்வியலில் புதை குழி கலாசரம் முக்கியப் படுகிறது இதனோடு இணைந்தே சிறிய சுடு மண் சிற்பங்கள் முக்கியப் படுகின்றன.இதனை, 1823ம் ஆண்டு அப்போதைய மலபார் பகுதிகளில் ( கேரள மாநிலம் ), ஆய்வு செய்த பேபிங்டன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் வெளி உலகுக்கு கொண்டு வந்தார். இவர், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகளை, பல்வேறு ஆதாரங்களுடன் பதிவு செய்தார்.

'தமிழ் நாட்டு சுடு மண் சிற்பம்'

இதன்பின்பு தான், இந்தியாவின் தென்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும், தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.பல கண்டு பிடிப்புகளையும் செய்தனர்.

தமிழகத்தில், ஈரோடு கொடுமணல், திருநெல்வேலி ஆதிச்சநல்லுார், நீலகிரி தெங்குமரஹாடா, மசினகுடி, கோத்தகிரி, ஏக்குனி, நீர்காய்ச்சிமந்து ஆகிய பகுதிகள், பல்வேறு வரலாற்று பதிவுகளை உள்ளடக்கியதாக உள்ளன.

நீலகிரியில், 1873ம் ஆண்டு அப்போதைய கமிஷனராக இருந்த பிரீக்ஸ் என்ற ஆங்கிலேயர், முதன்முதலாக, பெருங்கற்கால புதை குழிகளில் இருந்த சுடுமண் சிற்பங்கள் மற்றும் கலை பொருட்களை கண்டறிந்தார். அவரால் சேகரிக்கப்பட்ட, புராதாண கலைப்பொருட்கள், சென்னை அரசு அருங்காட்சியத்திலும், லண்டன், பெர்லின் போன்ற பிரபலமான அருங்காட்சியகங்களிலும், இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது

'நீலகிரி சுடு மண் சிற்பங்கள்'

பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்து விட்டால், அவர்களின் சடலத்தை புதைக்கும்போது, அதனுடன், நம்முடன் வாழும் கால்நடைகள் உட்பட பல்வேறு பொருட்கள், சுடுமண் சிற்பங்களை, போட்டு புதைத்து மரியாதை செலுத்துவதை அக்கால மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால், பெரும்பாலான புதை குழிகளில் இத்தகைய சிற்பங்கள் காணப்படுகின்றன.

கடந்த,1983, 84, 88, 91 ஆகிய ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள, சிக்காகோ மெக்சிகன் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலன் சாகிரல் என்பவர், தமிழ் நாட்டுக்கு வந்து, பெருங்கற்கால புதை குழிகள் பற்றி ஆய்வு செய்து, பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவை மாணவர்களுக்கான பாடங்களாகவும் உள்ளன.மேலும், இந்த கலாச்சார பரிமாற்றங்கள் அக்காலத்தில், நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்கு; கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதிகளில் இருந்து தான், இந்த கலாச்சாரம் இங்கு பரவியுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது.

கடந்த ஆண்டில்(2015) நீலகிரி மலை பகுதியில் தொல்லியல் ஆர்வலர் ரவிச்சந்தரன் மற்றும் குழுவினரால், உடைந்த நிலையில் சிதறி கிடந்த சுடுமண் சிற்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அப்போது, அப்பகுதியில் உள்ள புதைக்குழி, கிணறு வடிவ கல்லறை போன்றவை 2000 ஆண்டுகளை கடந்தும், பாதுகாப்புடன் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிணறு வடிவ கல்லறையில் கிடைக்கப்பெற்ற, பெருங்கற்கால மக்களின், சுடுமண் சிற்பங்களில், எருமை, யானை, ஆடு, சிறிய சட்டிகள் ஆகியவை இருந்ததை ஆறிய முடிகிறது

இலங்கையில் தமிழர்களின் பூர்விக வாழ்விடங்களில் இத்தகய சுடுமண் சிற்பங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன

1960களில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் ஸ்ரீலங்கா தொல்லியல் ஆணையாளர் கலாநிதி எஸ்.யு. தெரனியகலை சுடுமண் சிற்பங்களை கண்டெடுத்தார். இவையுடன் ஒத்தவையாக ஆனைவிழுந்தான் சிற்பங்கள் இருக்கின்றன. மல்லாவி சிற்பங்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட உள்ளன.

உருத்திரபுர சிற்பங்கள் 2000 ஆண்டுகளிற்கு முற்பட்டவை என எஸ்.யு தெரனியகல தெரிவித்திருந்தார். இவற்றைவிட கிளிநொச்சி உருத்திரபுரத்தில் எடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் வவுனியா நகர ஸ்ரீலங்கா தொல்பொருட்கலைச்சாலையில் உள்ளன

2004ம் ஆண்டில் மல்லாவியிலும் இத்தகய சிற்பங்களின் கண்டு பிடிப்பு நிகழ்ந்தது

'மல்லாவி சிற்பங்கள்'

மல்லாவியின் வயற்பகுதி ஒன்றில் வரம்புப் பாதை துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் சுடுமண் சிற்பங்கள்,மக்களால் கண்டெடுக்கப்பட்டன. பாதை துப்பரவுப் பணியின்போது மண்வெட்டிகளால் பொருட்கள் உடைபட்டுமுள்ளன. ஆனாலும் பின்னர் அவை பாதுகாப்பான முறயில் கையாளப்பட்டன..

இந்த சுடுமண் சிற்பங்கள் பெண் உருவங்களாக உள்ளன. அங்கு 5 மனித உருவங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று தலைப்பகுதியாக மட்டும் கிடைத்தது. மற்றொன்று தலைமுதல் இடுப்புவரையான பகுதியுடன் கிடைத்திருக்கிறது, இன்னொன்று தலை முதல் அடி வரையும்,மற்றொன்று தலை முதல் மார்பு வரையும், வேறொன்று முண்டமாகவும் கிடைத்துள்ளன

இதனைப் போலவே 2011ம் ஆண்டில் சாஸ்திரி கூழாங்குளத்தில் பொதுநோக்கு மண்டபம் ஒன்றிற்கு மண் இடுவதற்காக அருகிலுள்ள குளத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பரவும் போது அவற்றிலிருந்து சில மண் சிற்பங்களை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.

'சாஸ்திரி கூழாங்குழ சுடு மண் சிற்பங்கள்'

பின்னர் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் தலைமையிலான குழு வவுனியா சென்று குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் பொருமளுவு சிற்பங்களை ஆய்வுக்காக யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்திற்கு கொண்டு சென்றனர்

இது குறித்து பேராசிரியர் புஸ்பரட்ணம் கருத்துப் பகர்கையில் இற்றைக்கு இரண்டாயிரத்து 200 வருடங்களுக்கு முற்பட்ட சிற்பங்களே அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,

தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப்போன்று அந்த சிற்ப அமைவுகளைப்போன்றே இங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களும் உள்ளன என்று குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது

இந்த ஒரு பின்னணியிலேயே நாம் சம்பூரில் அண்மையில் கண்டெடுக்கப் பட்ட சுடு மண் சிற்பங்களையும் பார்க்க வேண்டும்.

'சம்பூர் சுடு மண் சிற்பங்கள்'

சம்பூரை உள்ளடக்கிய கொட்டியார பிரதேசம் தமிழ் மக்களின் பல்லாயிரம் வருச பழமை வரலாற்று சான்றுகளை கொண்டுள்ளது. வெருகல் பிரதேசத்து முதுமக்கள் தாழி,வெருகல் மலை பிராமி கல்வெட்டுகள் ,கட்டைபறிச்சான் கச்சகொடிமலை தமிழ் பிராமி கல்வெட்டு ,சேனையூர் பெண்டுகள் சேனை தொல் அடையாளங்கள் என நீண்டு செல்லும் தொல்லியல் சான்றுகளில் முக்கிய திருப்பு முனையாக சம்பூரில் கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்கள் உள்ளன

ஏனய இடங்களில் காணப் பட்டதை விட இதில் செய் நேர்த்தி காணப் படுவதோடு பல ஒற்றுமைகளையும் காணலாம்.

இவை பெருங் கற்காலப் பண்பாட்டுக்குரிய ஆதாரங்களே. தமிழர்களின் மிகத்தொன்மையான கலை வடிவங்கள் சுடுமண் ஆக்கங்களிலேயே உள்ளன. சிந்துவெளி முதல் தமிழகம் ஆதிச்ச நல்லூர் வரை அதன் நீட்சி வன்னியிலும் இன்று சம்பூர் வரை நீண்டுள்ளதை இது நிருபிக்கிறது.தமிழரின் தொன்மை கலை சான்றுகளாக சுடுமண் சிற்பங்களே உள்ளன .அதுவே நம் பூர்விக கலை.அதன் தொடர்ச்சியே கற் சிற்பங்கள் .

சம்பூர் சுடு மண் சிற்பங்களில் உள்ள பெணுருவங்கள்,யானையின் வடிவம் முக உருவங்கள் விளக்கின் தாழ்பாள் போன்றவை தமிழரின் தொன்ம சிற்பக் கலையின் சுவடுகளறதோடு ஒரு தாழியின் எஞ்சிய பகுதியும் இங்கு காணப் படுகிறது.கிட்டத்தட்ட 2500 வருசங்களுக்கு முந்தய ஒரு நாகரிகத்தின் எஞ்சிய பதிவுகளாகவே இவற்றை இனங்கான முடியும் .

நீலகிரியில் கண்டெடுக்கப் பட்ட சிற்பங்களுக்கும் சம்பூர் சிற்பங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை அதன் அமைப்பிலும் நேர்த்தியிலும் தெரிகிறது.

திருகோணமலை திருமங்கலாய் காட்டுப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம்

 

திருகோணமலை திருமங்கலாய் காட்டுப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம்


இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

இலங்கையில் இந்து மதத்துக்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும், அந்த மதம் சார்ந்த  ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன.  அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.

திருகோணமலை திருமங்கலாய் காட்டுப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபட்டபோது

சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து  ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன்  பின்னர் பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின்  பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போர்த்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில்  பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

ஆயினும் தற்காலத்தில் அவ்வாலயங்கள் இருந்த ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வாலயங்களின் அழிபாடுகளை அடையாளம் காணமுடிகின்றது. ஆயினும் அவ்வழிபாடுகளை வைத்து அவ்வாலயங்களின்  கட்டட அமைப்பையோ, கலைமரபையோ, வழிபாட்டிலிருந்த தெய்வங்கள் பற்றியோ அறியமுடியவில்லை. இதற்கு இம்மாகாணங்களின் கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கேயரும், பின்வந்த ஒல்லாந்தரும் சுதேச மதங்களுக்கு எதிராகக் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் இவ்வாலயங்கள் அழிக்கப்பட்டதே காரணமாகும். அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களின் கட்டிடப் பாகங்களைக் கொண்டே அவர்களின் ஆட்சிக்காலக் கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்கள், நிர்வாகக் கட்டடங்கள் என்பன கட்டப்பட்டன. இந்த உண்மையை  அவர்களின் ஆட்சி ஆவணங்களே உறுதி செய்கின்றன. இதை தற்போது யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் இந்து ஆலயங்களுக்குரிய கட்டடப் பாகங்கள் மேலும் உறுதிசெய்கின்றன. இருந்த போதிலும் போர்த்துக்கேயர்,  ஒல்லாந்தர் ஆட்சியில், அவர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை அண்டிய  மாகாணங்களில் ஏற்பட்டிருந்ததனால் அவர்களின் கலையழிவுக் கொள்கையில் இருந்து மாகாணங்களின் உட்பகுதியில் இருந்த ஆலயங்கள் தப்பித்திருக்க இடமுண்டு. அவற்றில் ஒன்றாகவே  திருமங்கலாய்ச்  சிவன் ஆலயத்தைப் பார்க்கின்றேன்.

இவ்வாலயம் திருகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட திருமங்கலாய் என்ற வரலாற்றுப் பழமைவாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பற்றி  திருகோணமலை தலபுராணங்களில் ஒன்றான திருக்கரைசை புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது  இவ்வாலயம் கிளிவெட்டியின் பிரதான வீதியில் இருந்து ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் மின்சார வேலி போடப்பட்ட அடர்ந்த காட்டின் மத்தியில் காணப்படுகின்றது. இவ்விடத்திற்குச் செல்லும் பாதையில் பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் யானைகளின் நடமாட்டத்தை எதிர்கொள்வது சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. இவற்றின்  காரணமாகவே இதுவரை தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் இவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதில் தயக்கம் காட்டி வந்துள்ளனர்  எனலாம். இந்நிலையில் திருமங்கலாய் பிரதேசத்தில் வாழ்ந்த மூதாதையினரின் வழித்தோன்றல்களாக தற்போது  கிளிவெட்டியில்  வாழ்ந்து வரும் திரு. வி. முத்துலிங்கம், திரு. கே. குரேந்திரராசா, திரு. கே. மாணிக்கராசா முதலியோர் இவ்வாலயத்தை ஆய்வு செய்வதற்கு எமக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதமும் உதவிகளும் அவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தன. இந்த ஆய்வில் எமது பல்கலைக்கழக தொல்லியல் இறுதிவருட மாணவர்களுடன் மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாண செயல்திட்ட முகாமையாளர் திரு. லக்மன் சந்தன மைத்திரிபால மற்றும் யாழ்ப்பாண பிராந்திய தொல்லியற் திணைக்கள அதிகாரிகளான திரு. மணிமாறன், திரு. கபிலன் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் எம்முடன் இணைந்து பல நாட்களாக ஆய்வில் பங்கெடுத்தமை மாணவர்களுக்குப் புதிய ஆய்வு அனுபவத்தைக் கொடுத்தது.

அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம்

தற்போது இவ்வாலயத்தின் பெரும்பகுதி  முற்றாக அழிவடைந்து அதன் அழிபாடுகள் ஆங்காங்கே கற்குவியல்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் அவ்வாலயத்தின் கட்டட அமைப்பையும், அதன் கலை மரபையும், ஆலயம் தோன்றி வளர்ந்த காலத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய நம்பகரமான ஆதாரங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. கருங்கற்களையும், செங்கற்களையும் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகமும் அதன் மேலமைந்த விமானமும் முற்றாக அழிவடைந்து அதன் கட்டடப் பாகங்கள் ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுகின்றன. கர்ப்பக்கிரகம் இருந்த இடம் பிற்காலத்தில் புதையல் எடுப்போரால் தோண்டப்பட்டு அவ்விடம் தற்போது ஒரு குழியாகக் காணப்படுகின்றது. கர்ப்பக்கிரகத்திற்கு முன்னால் அழிவடைந்து காணப்படும் அந்தராளத்தில் ஆலய காலப் பொருட்கள் சிலவற்றுடன் பிற்காலத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்ட சிவலிங்கமும் காணப்படுகின்றது. அந்தராளத்திற்கு முன்னால் மகாமண்டபமும், பலிபீடமும் இருந்தற்கான அத்திவாரங்களும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரத் தன்மை கொண்ட பல கருங்கற் தூண்களும் காணப்படுகின்றன. இம்மகாமண்டத்திற்கு வலப்பக்கமாக பயன்படுத்தப்படாத நிலையில் கருங்கற்களாலான மாடங்கள், தெய்வச் சிலைகள் வைப்பதற்குப் பயன்படுத்திய பீடங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தின் இடப்பக்கமாக ஆலயத்தில் பயன்படுத்தியிருந்த கோமுகிகள், சந்தனம் அரைக்கும் கற்கள், கபோத வடிவிலமைந்த அரைவட்டத் தூண்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்திற்கு மிக அருகில் கருங்கற்களைக் கொண்டு சற்சதுர வடிவில் ஆழமாகக் கட்டப்பட்ட ஆலயத்தின் தீர்த்தக் கிணறு காணப்படுகிறது. மேலும் இவ்வாலயத்தைச் சுற்றி சுற்று மதில்களும் அவற்றிடையே துணைக் கோவில்களும் (பரிவாரத் தெய்வங்கள்) இருந்திருக்கலாம் என்பதை அவற்றிற்குரிய அத்திபாரங்களும், பரவலாகக் காணப்படும் செங்கற்களும், கருங்கற்களும் உறுதிப்படுத்துகின்றன.

ஆயிரமாண்டுகளுக்கு-முற்பட்ட-கல்வெட்டுகள்-3

இந்த ஆய்வின் போது கட்டட அழிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் இவ்வாலய வரலாற்றுடன், கிழக்கிலங்கை வரலாறு பற்றிய ஆய்விலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. எமக்குத் தெரிந்தவரை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்களுடன் அவ்வாலயங்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு அம்சங்களும் முதன் முறையாகத் திருமங்கலாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் எழுத்தமைதியைக் கொண்டு அவை வேறுபட்ட காலங்களில், வேறுபட்ட நோக்கங்களுக்காக பொறிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.  அவற்றுள் கி. பி. 10ஆம், கி. பி. 11ஆம் நூற்றாண்டுக்குரிய மூன்று கல்வெட்டுக்கள் ஆலய நிர்வாக ஒழுங்குகள் பற்றியும், அவ்வாலயத்திற்கு சிற்றம்பலம் உடையார், திருவெண்ணைக்கூற்றன், திருவரங்கம் முதலான அதிகாரிகள், சமூகப் பெரியவர்கள் வழங்கிய தானங்கள் (காசு) பற்றியும் கூறுகின்றன. கி. பி. 15ஆம், கி. பி. 16ஆம் நூற்றாண்டுக்குரிய ஏனைய இரு கல்வெட்டுக்களும் இவ்வாலயத்திற்கு பசுக்கள் தானமாக வழங்கப்பட்ட  செய்திகளைக் கூறுகின்றன. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கங்குவேலி என்ற இடத்தில் திருமங்கலாய் ஆலயத்திற்குரிய மணி ஒன்று காணப்படுகின்றது. இது திருமங்கலாய் ஆலயத்தில் இருந்து பிற்காலத்தில் கங்குவேலிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மணியாகும். அவ்வாலய மணியில் திருமங்கலாய் கோவிலுக்கு அவ்வூரில் வசித்த (திருமங்கலாயில் வசித்த) “பத்திபெட்டி மகன் பத்தன் யுடைய உபையம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சாசனத்தின் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி. பி. 17 ஆம் நூற்றாண்டிற்கு உரியதெனக் கூறலாம். ஆகவே மேற்கூறப்பட்ட கல்வெட்டுகள், ஆலய மணிச் சாசனம் என்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டு இவ்வாலயம் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டுவரை அழிவடையாத நிலையில் இப்பிரதேச மக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளமை தெரியவருகின்றது.

இவ்வாலயம் இலங்கைத் தமிழர் குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் பின்வரும் அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

ஆயிரமாண்டுகளுக்கு-முற்பட்ட-கல்வெட்டுகள்-1

1. இவ்வாலயம் கி. பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து திராவிடக் கட்டடக்கலை மரபில் தோன்றி வளர்ந்ததற்குப் பின்புலமாக திருமங்கலாய்ப் பிரதேசத்தின் தொன்மையான. செறிவான தமிழ்க் குடியிருப்புக்கள் இருந்துள்ளமை தெரிகின்றது. இந்த உண்மையை எமது ஆய்வின் போது இப்பிரதேசத்தில் ஆங்காங்கே பிற தேவைகளுக்காக வெட்டப்பட்டிருந்த  ஆழமான குழிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மட்பாண்ட ஓடுகள்,  கூரை ஓடுகள், சுடுமண் உருவங்கள் முதலான  சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

2. தமிழகத்தில் பல்லவர் ஆட்சியில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் சமகால இலங்கையிலும் கற்களைப் பயன்படுத்தி திராவிடக் கலைமரபில் ஆலயங்கள் அமைக்கும் மரபு தோன்றி வளர்ந்ததைக் காணமுடிகின்றது. அவற்றுள் சோழ ஆட்சியின் தலைநகராக இருந்த பொலநறுவையில் கட்டப்பட்ட இரண்டாம் சிவதேவாலயமே இலங்கையில் இதுவரை ஓரளவு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்திய திராவிடக் கலைமரபில் கட்டப்பட்ட ஆலயம் எனக் கூறப்படுகின்றது. ஆனால் பொலநறுவை இராசதானி கால வரலாற்றில் எந்த இடத்திலும் சொல்லப்படாத திருமங்கலாய் சிவன் ஆலயம் அதன் கட்டட அமைப்பிலும், கலைமரபிலும் சற்று மேலோங்கிக் காணப்படுவதன் முக்கியத்துவம் எதிர்காலத்தில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.

3.சோழர் ஆட்சியிலும் சோழர் ஆட்சிக்குப் பின்னரும் பொலநறுவைக்கு அப்பால் வடக்கு – கிழக்கு இலங்கையிலேயே சோழ ஆட்சியாளர், தமிழ் அதிகாரிகள், தமிழ் வணிக கணங்கள் முதலியோரால் கட்டப்பட்ட ஆலயங்கள் பற்றிப் பல தமிழ் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆயினும்  அக்கல்வெட்டுக்கள் கூறும் ஆலயங்கள் எந்த இடங்களில் இருந்துள்ளன என்பது பெரும்பாலும் இதுவரை அடையாளம் காணப்படாமலே உள்ளன. ஆனால் திருமங்களாயில் ஆலயம் பற்றிய கல்வெட்டுக்களுடன், ஆலய அமைப்பையும், அதன் கலை மரபையும் அறியக்கூடிய அரிய பல ஆதாரங்கள் முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் கிழக்கிலங்கை இந்துக்களின் வரலாறு, பண்பாடு பற்றிய எதிர்கால ஆய்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

4.இலங்கையில் அநுராதபுர இராசதானியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில பௌத்த ஆலயங்களே தற்காலத்திலும் வழிபாட்டிற்குரிய ஆலயங்களாகக் காணப்படுகின்றன. ஆனால் அநுராதபுரத்திலும், இலங்கையின் ஏனைய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான ஆதிகால, இடைக்கால ஆலயங்கள் இலங்கையின் மரபுரிமைச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பிற்காலத்தில் அவை சுற்றுலாத்துறையின் முக்கிய மரபுரிமை மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயம் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டு வரை அங்கு வாழ்ந்த மக்களின் பிரதான வழிபாட்டு ஆலயமாகவே இருந்துள்ளது. இந்த உண்மையை அவ்வாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களும், ஆலய மணியில் பொறிக்கப்பட்டிருக்கும் சாசனமும்,  அங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களின் நில உரிமைப் பத்திரங்களும் உறுதிப்படுத்துகின்றன.

ஆயிரம்-ஆண்டுகளுக்கு-முற்பட்ட-சிவன்-ஆலயம்-2

இவ்வாலயத்தின் பழமையையும், அதன் வரலாற்றுப் பெறுமதியையும் எமது ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட சக்தி தொலைக்காட்சி நிறுவனம் இவ்வாலயத்தை ஆவணப்படுத்த முன்வந்தது. இதற்காக அரச திணைக்கள அனுமதியுடன் அன்றைய சக்தி வானொலி அலைவரிசை பிரதானி திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையில் தற்போதைய சக்தி வானொலி அலைவரிசை பிரதானி ஆர். பி. அபர்ணா சுதன், திரு. ஞா. கணாதீபன் முதலியோரைக் கொண்ட குழுவினரை திருமங்கலாய்க்கு அனுப்பி வைத்தது. அவர்கள் ஏழு மைல் தூரம் கால் நடையாகவும், உழவு இயந்திரத்திலும் அச்சத்துடன் காட்டு வழியாகப் பயணம் செய்து திருமங்கலாய் சிவன் ஆலயத்தில் காணப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆவணப்படுத்தினர். இவ்வரிய பணியால் ஆய்வில் ஈடுபட்ட எமக்கும் அங்கு கூடியிருந்த மக்களுக்கும் தனது காலத்திலேயே இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் என அயராது உழைத்து வரும் திரு. வி. முத்துலிங்கத்திற்கும் பெரும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது.

இவ்வாலயத்தை ஆவணப்படுத்திய சக்தி தொலைக்காட்சி நிறுவனம் அது பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற போது இவ்வாலயம் பற்றி மேலும் அறிய வேண்டும், நேரில் பார்வையிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட நாம் இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்து பாதுகாக்கும் நோக்கில் திருமதி உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களுடன் இணைந்து பல முயற்சிகளில் ஈடுபட்டோம் அதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், அமைச்சின் அதிகாரிகள், கௌரவ இராஜங்க கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலியோரின் உதவிகளை நாடினோம். இலங்கைத் தொல்லியற் திணைக்களம் தனது அதிகாரிகளை அனுப்பி இவ்வாலயத்தின் பழமையை உறுதிப்படுத்திக் கொண்டது. மத்திய கலாசார நிதியம் ஆலயத்தை மீள்புனரமைப்புச் செய்வதைப் பரிசீலிப்பதாகப் பதில் அனுப்பியது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலிக்க முன்வந்த அதிகாரிகளும் பதவி மாற்றம் செய்யப்பட்டதால் தற்போது, எல்லா முயற்சிகளையும் நாம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கவேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு நாட்டின் தற்போதைய நிலையும் சாதகமாகக் காணப்படவில்லை.

இருப்பினும் விலைமதிக்க முடியாத எமது மரபுரிமைச் சின்னம் ஒன்று எம் கண்முன்னே மண்ணுக்குள் மறைந்து போவதை வேடிக்கை பார்க்கும் நிலையும் இல்லை என்றே நம்புகின்றோம். ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுகால அனர்த்தத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்த எமது மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய போது தமது இருப்பிடங்களைக் காட்டிலும் தமது வழிபாட்டு ஆலயங்களை மீளுருவாக்கம் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த பெருமைக்குரியவர்கள். இது மதத்தின் மீது எமது மக்களுக்கு உள்ள அதீத நம்பிக்கையைக் காட்டுகின்றது. ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயத்தை ஒரு வழிபாட்டு ஆலயமாக மட்டும் பார்க்க முடியவில்லை. பலதரப்பட்ட மக்களின் பார்வையில் இவ்வாலயம் இலங்கையில் உள்ள தேசிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக நோக்கப்படலாம். ஆனால் இந்து மக்களைப் பொறுத்தவரை இவ்வாலயம் அவர்களின் எதிர்காலச் சந்ததியினரிடம் கையளிக்கப்பட வேண்டிய நம்பிக்கை நாற்று. அதற்கும் அப்பால் இலங்கையில் இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை அடையாளப்படுத்தும் விலை மதிக்க முடியாத மரபுரிமையின் அடையாளம், இம்மரபுரிமைச் சின்னங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களின் வரலாறும் பண்பாடும் பொதிந்து காணப்படுகின்றன. ஆகவே இவ்வாலயத்தை மீட்டெடுத்து மீளுருவாக்கம் செய்து, பாதுகாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும். இப்பணி அரசியல், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இந்த உண்மையை உரியவர்களிடம் கொண்டு செல்வதற்கு எமது ஊடகங்கள் தமது பணியை தொடர்ந்தும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் எமக்குண்டு.

தொடரும்.