Saturday, 1 August 2020

எலு மொழி (Eḷu / Helu) என்பது சிங்களத்தின் மூல மொழியாகக் கொள்ளப்படும் பொ.ஆ.முந்திய 3 ஆம் நூற்றாண்டைச் (BCE 3rd cent) சேர்ந்த ஒரு மொழியாகும். சிலர் `இது பிராகிரத மொழியின் ஒரு வடிவமாகும்` என்கின்றனர். வேறு சிலர் இது ஒரு தமிழினை மூலமாக்கொண்ட ஒரு திராவிடமொழி என்கின்றார்கள். இந்த இரண்டாவது நோக்கினைச் சற்றுவிரிவாகப் பார்ப்போம்.
பொது ஆண்டு 6ம் நூற்றாண்டிற்கு (CE 6th cent) முன்னர் சிங்களம் என்றொரு மொழி இருந்ததற்கான சான்றுகளே எதுவுமில்லை. அவ்வாறாயின் அவர்கள் முன்னர் எந்த மொழியினைப் பேசினார்கள்? என்றொரு கேள்வி எழும். ஒரு வகையான தமிழ்மொழியினையே (semi Tamil) பேசினார்கள். பின்னர் பெளத்த மத வருகையுடன் பாளி மொழியும், பின்னர் மகாயன பெளத்தத்தினூடாக சமஸ்கிரதமும் அவர்களது மொழியில் செல்வாக்குச் செலுத்தின. இதனை எலு ( #Elu ) என்கின்றனர் (சிலர் முதலில் பேசப்பட்ட அரைத் தமிழினையே எலு என்கின்றனர்). பப்புவா நியூக்கினியா என்ற நாட்டிலுள்ள ஒரு மொழியின் பெயரும் எலுவே , அது வேறு - இது வேறு. பாளி மொழியின் தாக்கத்தினால் முதலிலும், சமஸ்கிரதத்தினால் பின்னரும் அவர்களின் மொழி, தமிழிலிருந்து தூர விலகிப்போனது. { இங்கு தமிழிலிருந்து சமஸ்கிரதக்கலப்பினால் மலையாளம் எவ்வாறு பிரிந்ததோ அவ்வாறே சிங்களமும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னரே பிரிந்துபோயிற்று.}.
மொழியிலாளர்களின் கருத்துப்படி இன்றும் ஏறக்குறைய 4000 தமிழ்ச்சொற்கள் சிங்கள மொழியில் உள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சிங்களத்தால் தனித்து இயங்கமுடியாது என்கின்றார்கள். அத்தகைய 4000 சொற்களில் ஒரு பகுதியினை கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கிக் காண்க.

இப்போது உங்களிற்கு `இவ்வாறு தமிழும் சிங்களமும் இணைந்திருந்தால், பின்பு ஏன் இவளவு மோதல்கள்` என ஒரு கேள்வி எழலாம். உண்மையில் முன்பு (CE 10th ) அவ்வாறு எந்தவித இன மோதல்களும் இல்லை. எல்லாளன்-துட்டகைமுனு மோதலே இரு அரசர்களிற்கிடையேயான நாடு பிடிச்சண்டையே. (ஒரளவிற்கு மதமும் காரணம்). துட்டகைமுனு பக்கத்தில் பல தமிழர்கள் தளபதிகளாகப் பணியாற்ற, எல்லாளன் பக்கத்தில் பல சிங்களவர்களும் இருந்திருந்தனர். மிகப் பிற்காலத்திலேயே எல்லாளன்-துட்டகைமுனு மோதல் இனமோதலாக உருவகப்படுத்தப்பட்டது.

இராசேந்திர சோழன் முதலான பிற்காலச் சோழர்களின் படையெடுப்புக்களிற்குப் பின்னரே இன-மத மோதல்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கின்றன.உண்மையில் மதம் தமிழர்களிடமும் பரவலடைந்திருந்தமைக்கான தொல்பொருட் சான்றுகள், (மணிமேகலை போன்ற) இலக்கியச்சான்றுகள் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. அனுராதபுரம் என்ற ஒரு நகரிலேயே அபயகிரி விகாரையில் தமிழ் பௌத்தமும், மகா விகாரையில் பாளி மொழியிலான பௌத்தமும் ஒரே காலப்பகுதியில் காணப்பட்டமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் உண்டு . இந்த வரலாற்று உண்மைகளை ஏற்றுக்கொள்ள பௌத்த சிங்கள வாதமும், சைவ மதவாதமும் தயாராகவில்லை.
இப்போது கடுமையாகச் சிங்கள இன வாதம் பேசும் சிலரினைத் தனிப்பட்ட முறையில் பார்ப்போம். தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்காவினை (S.W.R.D. Bandaranaike) எடுத்துக்கொண்டால், அவரின் முன்னோரான பெருமாள் தமிழ்நாட்டிலுள்ள செட்டியார் எனும் பிரிவினைச் சேர்ந்தவர். `பண்டார` என்று சிங்களவர்களிடையே காணப்படும் பொதுப்பெயரானாது, தமிழிலுள்ள `பண்டாரம்` எனும் பிரிவின் வழிவந்தவர்கள். Gananath Obeyesekere என்ற சிங்கள அறிஞர் 12ம், 13ம் நூற்றாண்டளவில் இந்தியாவிலிருந்து வந்த பண்டாரங்களே `பண்டா` என்ற சிங்களப் பிரிவினர் என்கின்றார். {தமிழ்நாட்டில் பார்ப்பன வருகையினால், பூசகர் பதவியினை இழந்த பண்டாரங்களில் சிலர் இவ்வாறு இலங்கை வந்து சிங்களவருடன் கலந்து `பண்டா` என மாறியிருக்கலாம் என நான் உய்த்துணர்கின்றேன் }. J.R. Jayewardene இன் கொள்ளுத் தாத்தாவான தம்பி முதலியார் கூட தமிழகத் தொடர்புடையவரே. மகிந்தவின் உடன்பிறப்புக்கூட தமிழக மணத்தொடர்புடையவரே. இவ்வாறானவர்கள் இன-மத வாதம் பேசுவதெல்லாம் தமது சொந்தக் குறுகிய அரசியல் ஆதாயங்களிற்கேயன்றி, வேறு ஒன்றுமில்லை.
சிங்களவரின் மரபணுச் சோதனைகள் முன்னர் தமிழகத் தமிழருடன் பெருமளவான தொடர்பினைக் காட்டியபோதும், பிந்திய சோதனைகள் வங்களாத்துடன் பெருமளவிற்கும், தமிழர்களுடன் குறிப்பிடத்தக்களவு தொடர்பினையும் காட்டுகின்றது. (இந்த வங்காள மக்களும் திராவிட இனப்பிரிவினரே- (Bengalis were Mongoloid Dravidians). எனவே சிங்களவர்கள் ஆரியர்கள் என்பது வெறும் கற்பனையே.
முடிவாக சிங்களம்-தமிழ் ஆகிய இரண்டும் இன-மொழிரீதியாக அண்மைக் காலம்வரை பல்வேறு வழிகளில்(Elu) தொடர்புற்று, இன்று வேறுபட்டு நிற்பவையே. சிங்களத்தின் வேர்கள், சிங்கத்துடனல்லாமல், தமிழுடனேயே தொடர்புற்றுள்ளன.
  

சங்க காலத் தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகள்

சங்க காலத் தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகள் நிறையவே சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

குடவாயில் கீரத்தனார் பாடிய அகநானூற்றின் 129வது பாடல் :

"கலங்கு முனைச் சீறூர் கை தலை வைப்பக்
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்"
‘கொழுப்பு ஆ தின்ற =கொழுத்த மாட்டினை சாப்பிட்ட
மேலுள்ள பாடலில் மாட்டிறைச்சியினை கடவுளிற்கே படைத்து, உண்டதனைக் காணலாம்.

நக்கீரனார் பாடிய அகநானூற்றின் 249வது பாடல் இது : "தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள்வாய்க் கோடை"

ஆ =மாடு

“வயவாய் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மறவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்…." : :அகநானூற்றின் 309

கொழுப்பா = கொழுத்த பசு
இவ்வாறு சங்க காலப் பாடல்கள் பலவற்றில் பழந் தமிழர் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகளைக் காணலாம்.
சங்க காலத்திலிருந்து பக்தி இயக்க காலத்திற்கு வருவோம்.
"ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவரன்றே யாம் வணங்கும் கடவுளாரே"
: `சங்கநிதி பதுமநிதி` எனத் தொடங்கும் அப்பர் பாடிய தேவாரம்.
இப் பாடலில் மாட்டிறைச்சி உண்ணும் சிவ பக்தர்களை கடவுளாகவே அப்பர் காண்கின்றார்.
இப்போது மாணிக்கவாசகர் காலத்திற்கு வருவோம்.
"மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்(கு) ஊரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட ஊசிகொல் சேரியில் விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே"
: ( எட்டாம் திருமுறை திருக்கோவையார் 386; மாணிக்கவாசகர்)
ஆத் திண்ணி = மாட்டிறைச்சி உண்ணும்.

இவ்வாறு பழந் தமிழர்களின் உணவில் மாட்டிறைச்சியும் ஒரு கூறாகவே காணப்பட்டுவந்துள்ளது.

Thursday, 11 June 2020

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
     தொல் பழங்காலத்திற்கு முன்பாகவே தமிழர்கள் தங்களுடைய கலை மற்றும் அழகுணர்ச்சியை அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தினர். இயற்கையைத் தெய்வமாகவும் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட தமிழ் இன மக்கள் தங்களுடைய முதல் அணிகலனை இயற்கையின் எழில்மிகு கற்கள்,பூக்கள், கொடி,ஓலை[1]ஆகியனவற்றை அணிந்து மகிழ்ந்தான். இது தொடர்ச்சியாக உலோகங்களுக்கும் அடிகோலின. கலைத்திறனை வெளிப்படுத்தும் பயன்படு பொருளாகவும் ஒவ்வொரு காலத்திலும் அணிகலன்கள் விளங்குகின்றன.
மனிதகுலத்திற்கு புலன்கள் அவசியமாக கருதப்பெற்றன.தமிழன் அப்புலன்களின் உறுப்புகளுக்கு அழகூட்டிட அணிகளால் சிறப்புற மெருகூட்டினான்.சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ‘’காதொன்று களைதல்’’ [2] என்ற பாடல் அடியிலிருந்து காதணி பற்றிய செய்தியை அறியமுடிகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால்,
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை-திருக்குறள்,411.
என்று போற்றப்பட்ட செவியை தமிழன் அலங்கரித்த விதம் பற்றிக் காண்போம்
வடிகாது -  காது வடித்தல்
எழில்மிகுச் சிற்பங்களைச் செய்வதை சிலை வடித்தல் என்று கூறுவர். காதினைக் குத்தி , அதில் படிப்படியாக எடையுள்ள சிறிய வளைகளைக் தொங்கவிட்டு காதினைத் தோள் பட்டையைத் தொடாமல் அழகுறத் தொங்கவிடுவது காது வடித்தல் எனப்படும்.
வடிகாது என்ற காதுவடித்தல் வழக்காறு தமிழ் மக்களிடையே சங்க காலம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மங்கலச் சின்னமாக, நம்பிக்கை வயப்பட்ட பழக்க வழக்கமாக இருந்து வந்தது. காது துளையிடப் பெற்று வடிகாதாக நீட்சி பெறச்செய்வர் இது காது வடித்தல் என்றும் கூறப்பெறும்.இது உயர்வான அழகுணர்ச்சியின் அடையாளமாகக் கருதப் பெற்றது.
முற்காலத்தில் இளம்பெண்களுக்கு மணமாவதற்கு முன்பாக காதுவடித்து சிறிய அணிகலன்களை அணிந்து மகிழ்வர். மணமான பெண்கள் பாம்படம்,  தண்டட்டி,  திருகு என்ற கனமான உள்ளீடுகளைப் பெற்ற தங்கம், வெள்ளி நகைகளை அணிவர். வளமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக நகை அணிந்து, வடிகாது தோள்பட்டை வரை நீட்சி பெறுவதுண்டு. இவ்வாறு காதுவடித்து நகைகளைப் பூட்டி மகிழ்வது மங்கலமாகக் கருதப்பட்ட நம்பிக்கை வயப்பட்ட பழக்கமாக இருந்து வந்தது. காதின் மேற்பகுதி, மையப்பகுதி காதின் அடிமடல்பகுதி என மூன்று இடங்களில் விதவிதமாக அணிகளை அணிந்துள்ளனர்.
கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழரின் பண்பாட்டிற்குள் பெளத்தம் ,சமணம் ஆகிய இரு சமயங்களின் புகுந்து செழித்தன.பெளத்த,சமண முனிவர்கள் தங்களுடைய காதினை வடிகாதாகத் தொங்க விட்டுக் கொண்டனர். என்பதை சமணர்மலை,  நாகமலை, கழுகுமலை,  திருப்பரங்குன்றம்,ஆனைமலை,  அழகர்மலை,  ஆறுநாட்டான்மலை,சித்தன்னவாசல்,ஆகியவற்றில் காணப்படும் புடைச்சிற்பங்கள்,தூண் சிற்பங்கள், எழில்மிகு ஓவியங்கள் மூலம் அறியலாம். தங்களுடைய காதினை வடித்துக் கொண்டது நம்பிக்கை வயப்பட்ட பண்பாட்டுக் கூறாகக் கருதலாம். வடிகாது வழக்காறு தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாக இருந்தது என்பதற்கு அடிப்படையாக பல்லவர் குடைவரைப் படைப்புக்களில் முதன்மையான மாமல்லபுரத்திலும், பாண்டியரின் குடைவரைப் படைப்புக்களில் கழுகுமலையிலும், சோழரின் கலைப்படைப்புக்களில் வடிகாது வடிவங்கள் தஞ்சையிலும் நிறைந்துள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள  ஆயிரக்கணக்கான கோயில்களில் காணப்பெறும் சிலைகள், கோபுரங்கள்,தூண் சிற்பங்கள்,ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பல்வேறு காலங்களில் ஆட்சி செய்தவர்களுடைய  காலங்களிலும் வடிகாது என்பது தொடர்ந்து வரும் கூறாக காட்சி தருகின்றன.  .
இயற்கை அணிகலன்கள்
இயற்கையோடு இயைந்து தங்களுடைய வாழ்வியலை அழைத்துக் கொண்ட தமிழர்கள் தாங்கள் அணிந்த ஆடை,அணிகலன் ஆகியவற்றை இயற்கைப் பொருட்களால் அமைத்துக் கொண்டனர்.
பனைமரத்தின் குறுத்தோலையைச் சுருட்டிக் காதில் அணிந்தனர்.இது குதம்பை ஆகும்.அதன் நடுவில் இடையே நீலத்தாமரையைச் சொருகி வைக்கப்பட்டால் அது நீலக்குதம்பை என்றும் அழைக்கப்பட்டது.
குழைவடிவமாக அழைக்கப்படும் காதணி திருக்குதம்பை ஆகும். வலம்புரிச் சங்கில் செய்யப்பட்ட தோடு பெண்களால் மிகவும் விரும்பி அணியபெற்றது. சங்கினை அறுத்து அணிகலன் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் தமிழகத்திலுள்ள துறைமுகப்பட்டினங்களில் ஏராளமாக இருந்துள்ளன. இன்றும் அத்துறைமுகப்பட்டினங்கள் இருந்த பகுதிகளில் பூமிக்கடியில் சங்கு அணிகளின் விதவிதமான வடிவங்கள்,  வேலைப்பாடுகளுடன் கூடியவைகள் கிடைத்து வருகின்றன.
மணிமேகலைப் பாடல் சங்குத்தோடு பற்றி, “ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெந்தோட்டு”என்று குறிப்பிட்டுள்ளது.
காதில் அணியும் அணிகலன்கள் பல்வேறு பெயரிட்டு அழைக்கப் பெற்றன. தோடு என்ற அணிகலன் காதுடன் இணைக்கப் பெற்று ஒட்டியிருக்கும்.தோட்டிலிருந்து தொங்கும் நகை தொங்கட்டான் எனப்படும். ஒட்டு,ஓலை, சின்னப்பூ,கொட்பூ, கன்னப்பூ, குழை [3],  கம்பி,வல்லிகை, குணுக்கு,தருப்பு,கடுக்கண், மகரி,வீரசன்னம், திரிசரி, பஞ்சரி, நவசரி, நவகண்டி,அட்டிகை, கடிப்பினை, தண்டட்டி,  குண்டலம், கொப்பு,புகடி, முருகு, செவிப்பூ, மடல், சன்னாவதஞ்சம்,பாம்பணி, நாகபடம்,பாம்படம்,குதம்பை,  நீலக்குதம்பை,  சந்திரபாணி, குரடு, செவியீடு என்பனவாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில்,பெருமாளின் நவத் திருப்பதிகள் பல்வேறு சிறப்பியல்புகளுடன் அமைந்துள்ளன.அவற்றுள் தென்திருப்பேரை [3] மூலவர் மகரத்தை [மீனை] அணிகலனாக குழையாக [4] தனது வடிகாதில் அணிந்து கொண்டதால், மகரநெடுங்குழைக்காதர் என்று அழைக்கப்படுகின்றார்.
பெண்களும் மகரக்குழையை [5] அணிந்தனர் என்று ஒட்டக்கூத்தர் கூறுகின்றார்.
தெய்வங்கள்,உயர் நிலையில் மற்றவர்களால் வழிபடத்தக்க இடத்தில் வாழ்ந்தோர் மட்டுமின்றி எளிய மக்களும் நாகரீகத்தின் வெளிப்பாடாகக் காது வடித்தலைக் கொண்டிருந்தனர்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களுடைய காதுகளை வடித்துக் கொண்டு அழகுபடுத்திக் கொண்டனர் அதற்குச் சான்றாக முற்கால ஓவியங்களும்,சிற்பங்களும் உள்ளன.
பொற்பூ
காதிலணியும் அணிகலன் பொற் கன்னப்பூ என்றும்,மற்றுமொரு அணிகலன் நாறைக்கண்பட்டி என்றும் அழைக்கப்பட்டது. வளைய வடிவில் இருபகுதிகளாகச் செய்யப்பட்டு திருகாணி மூலம் பொருத்துவது தாழக்கூட்டுக்கம்பி ஆகும். சோழர் காலத்தில் முத்து பதிக்கப்பட்ட காதணி வடுகவாலி எனப்பட்டது. அது வட்டவடிவில் அமைந்ததாகும். வட்டவடிவ வாலி மக்களால் இரட்டை வாலி [7] என்றும் அழைக்கப்படுகிறது.
பூடி
மேற்காதில் அழகுற பூவடிவத்தில் அணிவது கொட்பூ எனப்பட்டது. திருகாணியோடு இருக்கும். கொட்பூ “ பூடி “ என்று தூத்துக்குடி வட்டாரத்தில் அழைக்கப்படுகின்றது. நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “முத்தின் சிடுக்கு”எனப்படும்.[8]. இப்பகுதியில் நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “கடுக்கண்” என்று கூறப்படுகிறது. “சிடுக்கு” “கடுக்கனாக”திரிபடைந்துள்ளது.
நாகரிக வளர்ச்சி
நாகரிக வளர்ச்சி , மக்களின் தகவல் தொடர்பு மேம்பாடு இவற்றால் இந்நாளில் காதுவடிக்கும் வழக்காறு நின்று போயிற்று. முன்னரே காது வடித்தவர்கள் மருத்துவ அறுவைச் சிகிச்சை மூலம் வடிகாதை அகற்றி ஒட்டவைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை இழந்தவர்கள் [ நாடார் சமுதாயத்தினர் ] வடிகாதில் அணிகலன் அணியாது வெள்ளை ஆடை அணிந்து இருந்தது, ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கூறாகும்.
முனைவர் தவசிமுத்து மாறன்
        குறிப்புகள்
1] தி.வை.சதாசிவ பண்டாரத்தார்,கல்வெட்டுகளில் தமிழ் இலக்கியம்,ப.87.
2] தொல்காப்பியம்,பொருள், 258.
3] ‘குழை என்ப தளிர் துவாரங் குண்டலஞ்சேறு’பிங்கல நிகண்டு,252.
3] தென்திருப்பேரை திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
.4] நாராயண தீட்சிதர்,தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை,பக்.25,26.