Wednesday, 9 October 2019

தோழர் Raja sangeethan வழியாக...

தோழர் Raja sangeethan
வழியாக...

இவர் யார்? இன்றைய "அசுரனுக்கு" உரிமையை கொடுத்தவர்.
இவர் தான் James H.A. Tremenheere
1891 பிரிட்டிஷ் அரசில் மெட்ராஸ் மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக, இரண்டாயிரம் ஆண்டு கொடுமையை தீர்க்க 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை பஞ்சமர்களுக்கு கொடுக்க சட்டம் இயற்றிய மாமனிதர்.

1873 இல் ICS அதிகாரியாகி 1878 மெட்ராஸ் மாகாணத்தில் சேர்ந்தார். சாதியற்ற மனிதனல்லவா இங்கே சாதியின் கோரமுகம் செய்யும் கொடுமையால் பஞ்சமர் எனப்படும் பறையர் மற்றும் பள்ளர்களின் இழி நிலை கண்டு அதை மாற்ற முனைந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு விரிவான ஆய்வறிக்கை அனுப்பினார்
அவருடைய Notes on Pariah of Chengelpet. அவர்கள் எப்போதும் பட்டினியோடு , அழுக்கு ஆடைகளோடு, கல்வியின்றி, பன்றிகளை போல வேட்டையாடப்படுகின்றனர். பிரிட்டிஷ் அரசு சட்டத்தின் மூலம் அடிமைத்தனத்தை அகற்றினாலும் சமூகத்தில் அடிமைகளாகவே உள்ளனர்

இந்த அறிக்கை May 16,1892 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு Depressed class land act 1892 என 30.9.1892 அரசாணை 1010/1010A மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை உள்ளடக்கிய தமிழ் நாடு , ஆந்திரா , கர்நாடக பகுதியில் பஞ்சமர் எனும் பறையர், பள்ளர்களுக்கு பஞ்சமி நிலமாக வழங்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இது தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை உயர விதைக்கப்பட்ட முக்கியமான விதை James H.A. Tremenheere தன் அறிக்கையில் பிராமணர்களும், வெள்ளாளர்களும், வன்னியர்களும் சேரிகளை ஆக்கிரமிப்பதை கண்டித்து " பிரிட்டிஷ் அரசு அனுமதித்த மரபுவழி பழக்கங்கள் இன்று காலத்திற்கு ஒவ்வாத புதிய அடிமைத்தனத்தை உருவாக்கிவிட்டது" என்று சாடுகிறார்.

Tremenheere மட்டுமல்ல அவருக்கு முன்பு கிருத்துவ மிஷினரிகள் Rev. William Goudie and Rev. Adam Andrew , பண்ணையாட்களாக தலித் மக்கள் நிலத்தோடு சேர்ந்து வாங்கி விற்கும் ஒரு பண்டமாக இருந்ததை ஆவணப்படுத்தியுள்ளனர். (எச்ச ராஜாக்கள் கிருத்துவ மிஷினரிகளை எரிச்சலோடு பார்க்க இதுவும் ஒரு காரணம்)

James H.A. Tremenheere எதிர்ப்புகளோடு, ஒத்துழைப்பும் இல்லாத போதும் சேரிகளை தானே நேரில் சென்று ஆய்வு செய்து விரிவான ஆய்வறிக்கை செய்து நிலம் மட்டுமல்லாது இலவச வீடு, இலவச பள்ளி கல்வி , உதவித்தொகை அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.( மனசார சொல்றேன் நீதான்யா மனுசன்)

இயற்றிய சட்டம் பத்து ஆண்டுகள் வரை பஞ்சமி நிலத்தை பிறருக்கு கொடுக்க தடை ,அத்துடன் பத்து ஆண்டுகளுக்கு பின்னும் நிலத்தை ஏனைய பஞ்சமர்களுக்கு மட்டுமே விற்க முடியும் என்ற சட்டப்பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் இவை பெயரளவில் மட்டுமே உள்ளது

K.Chandru 2007 ஆம் ஆண்டு தன் தீர்ப்பில் தலித்துகளிடம் இருந்து அவர்கள் நிலம் பிரிக்கப்பட்டால் அதை மறுபடியும் மற்றொரு தலித்துக்கே அரசு திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

1979 updated registry scheme நில ஆவணங்கள் சரியாக இல்லாததால் படிப்பறிவில்லாத ஏழைகளின் உரிமையை பறிக்கும் விதமாகவே முடிந்தது. நில உச்சவரம்பு சட்டங்களும் பெரிய பயன் தராது ஆதிக்க சாதிகளிடம் நிலம் சேர்வதை தடுக்க தவறியது
இதுவரை தமிழ் நாட்டில் 116392 ஏக்கர் மட்டுமே பஞ்சமி நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 16018 ஏக்கர் தலித் அல்லாதோரிடம் இருப்பதாக தகவல் கூறுகின்றன. தகவலறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்கள் பல முரண்களோடு இருப்பது நில ஆவணங்கள் சரியாக இல்லாதை உறுதி செய்கின்றன.

K. Meyyar CPI Madurai முயற்சியால் மதுரை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 2843 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போலவே TNUEF, National Federation for Dalit Land Rights Movement (NFDLRM) போன்ற பல இயக்கங்கள் பஞ்சமி நில மீட்புக்காக போராடி வருகின்றனர்.
இறுதியாக James H.A. Tremenheere கனவு இதுதான்.

சிறிது நிலம், இருக்க சொந்தமான வீடு, எழுத்தறிவு, தன் உழைப்பை எங்கு செலுத்தலாம் என்று தானே முடிவெடுக்கும் உரிமை, இதனால் உருவாகும் சுய மரியாதை இவை இருந்தால் வருங்காலத்தில் இவர்கள் நிலை முன்னேற்றம் வரும்.
கனவு மெய்ப்பட வேண்டும்

கீழடி - சில கேள்விகளும் ‌விடைகளும் 7.

கீழடி - சில கேள்விகளும் ‌விடைகளும் 

கேள்வி:
கீழடி செங்கல் கட்டுமானங்களில் கண்டெடுக்கப்பட்ட செங்கல், சிந்துவெளி நாகரிக கால கட்டுமான செங்கல் – இவற்றுக்கு இடையே தொடர்பு ஏதும் உண்டா? இதை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவை (அதாவது நீளம், அகலம், உயரம்) மட்டும் வைத்துப் பார்த்தால் சிந்துவெளிச் செங்கற்களையும் கீழடிச் செங்கற்களையும் ஒன்றெனக் கூற முடியாது.

சிந்துவெளிப் பண்பாட்டு செங்கற்களின் அளவு பெரும்பாலும் 28 செ.மீ*14 செ,மீ* 7 செ.மீ என்ற அளவில் (நீள, அகல, உயரம்) 4:2:1 என்ற விகிதத்தில் அமைந்தவை. கீழடியில் கிடைத்துள்ள செங்கற்கள் பெரும்பாலும் 36*24*6 என்ற அளவில் (6:4:1) என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. கீழடியில் சில இடங்களில் 34*24*7; 38*24*7; 33*23*6 என்ற அளவிலும் செங்கற்கள் கிடைத்துள்ளன. ஆனால் பெரும்பாலும் 36*24*6 என்ற அளவே மிகுதியாக உள்ளது.

சிந்துவெளிப் பண்பாட்டை அறிவிக்கும் (1924) முன்னரே 1905 இல் அகழ்வாய்வு செய்யப்பட்ட, இந்தியாவின் வரலாற்றுக் காலத்தின் முதல் அகழ்வாய்வுச் செங்கல் சுவர் தடயம் என்று கருதப்படும் பீகாரிலுள்ள ராஜ்கீரில் (மௌரியப் பேரரசின் காலம்) கிடைத்த பழங்கால் மதிற்சுவர்களில் பயன்படுத்தப்பட்ட செங்கல் 52*25*7 என்ற அளவில் (7.4: 3.5:1) என்ற விகிதத்திலும் 42*27*6 என்ற அளவில் 7:4.5:1 என்ற விகிதத்திலும் அமைந்துள்ளன.

இதனடிப்படையில் பார்த்தால் சிந்துவெளியின் ஆகச்சிறந்த செங்கல் பரிமாணத்தை வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவில் எந்த பிந்தையப் பண்பாடும் எட்டவில்லை என்பதே உண்மை. இதுபற்றி தனது கருத்தை கே.என் .தீட்சித் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். அசோகர் காலத்து செங்கற்களின் அளவு சிந்துவெளிச் செங்கற்களை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனாலும் இந்த கேள்விக்கான விடையை – சிந்துவெளிச் செங்கல்லிற்கும் கீழடிச் செங்கற்களுக்கும் இடையிலான அளவின் அடிப்படையில் நேரிடையான தொடர்பு இல்லை என்று கூறி முடித்துவிட முடியாது.‌ அளவின் அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும் பயன்பாட்டு ஒப்புமை ( சுவர்கள், வடிகால்கள், தரைத்தளங்கள்) கவனிக்கத்தக்கது.

சிந்துவெளிப் பண்பாட்டின் மிக அடிப்படையான அடையாளம் செங்கற்களும் அச்செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களும் கட்டிடங்களும் தான். சிந்துவெளிக்கு என்று ஒரு நிற அடையாளம் காட்டவேண்டும் என்றால் அது செவ்வண்ணம் தான். ஹரப்பா, மொகஞ்சதாரோ சிதைவிடங்களில் சிதறிக் கிடக்கும் செங்கற்களும் செம்பானை ஓடுகளும் தான் இதற்கு சாட்சியம்.

சிந்துவெளிப்பண்பாடு இருந்த இடம் தெரியாமல் புதைந்ததற்கு பின்னால் வடமொழி இலக்கியத்தில் செங்கல் அப்படி ஒன்றும் பெரிதாகப் போற்றப்படவில்லை. ஆனால் செங்கல் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளும் செங்கல் என்ற சொல்லின் பின்புலனாக விளங்கும் பொருளமைவு சார்ந்த கருத்தாக்கமும் முற்றிலும் மாறானது.
செங்கல் என்ற தமிழ்ச்சொல் ஒரே நேரத்தில் இரண்டு கருத்தை தெரிவிக்கும். செங்கல்லின் ஒரே அளவான செம்மை, ஒழுங்கு என்பது செங்கல்லின் தரக்கட்டுப்பாடும் தகுதியுமாகும். அதனால் தான் செங்கல்லை ஒரே அளவாக அறுப்பதற்கான அச்சு "செங்கல் கட்டளை" என்றும் கட்டளைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது செங்கல்லின் செந்நிறம். அது செம்மையாகவும் இருக்கிறது; சிவப்பாகவும் இருக்கிறது.

செங்கல்லின் உறுதியை உறுதி செய்வது அது சுட்டசெங்கல் என்பது தான். அதனால் தான் சுடாத செங்கல்லை ‘பச்சைக் கல்’ – (பச்சைக் குழந்தை, பச்சைக் காய்கறி என்று சொல்வது போல) - என்று சொல்கிறார்கள். செம்மைக்கும் ( ஒழுங்கிற்கும்) சிவப்பிற்குமான ( செந்நிறம்) வேர்நிலையான மானுட உளவியலுக்கு செம்மை, செம்பு, செப்பு, செப்புத்துறை, செந்தண்மை, செங்கோல், செங்களம், சே, சேய், சேயோன் போன்ற சொற்களின் ஆக்கமுறையை துருவினால் தெளிவு கிடைக்கும்.

சங்க இலக்கியத்தில் செங்கல் பற்றிய துல்லியமான சொல்லாடல்கள் ஏராளம். ”சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்” (பெரும்பாணாற்றுப் படை 405) என்ற சங்க இலக்கிய ஒற்றைவரிச் சொல்லாடல் சுட்ட செங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் கொண்ட ஒரு நகரம் பற்றி பேசுகிறது. சுட்ட செங்கற்களால் ஆன குடியிருப்பிற்கு கீழடி சான்றளித்திருக்கிறது. அது மட்டுமின்றி அத்தகைய சுவர்களைச் சித்தரிக்கும் போதெல்லாம் சங்க இலக்கியம் செம்பு என்ற உலோகத்தால் செய்யப்பட்டது போன்ற சுவர் என்றே திரும்பத் திரும்பக்
கூறுகிறது.

செம்பு விலையுயர்ந்த அரிய உலோகம். முழுவதும் செம்பைப் பயன்படுத்தி சுவர் எழுப்ப முடியாது. ஆனால் செம்பால் கட்டியது போன்ற சுவர் என்பது சுட்ட செங்கற்களின் செம்பு போன்ற வனப்பு, உறுதித்தன்மை, மேலும் செம்பு போன்ற ‘செந்நிறம்’ ஆகியவற்றை மனதில் வைத்து உயர்வு நவிற்சியாக கூறப்பட்டுள்ள ஆனால் இது உண்மையில் சுட்ட செங்கற்கள் பற்றிய சித்தரிப்பே ஆகும். "உவமை என்பது உயர்ந்ததன் மேற்றே" என்பது தொல்காப்பியம். எனவே இது பொருத்தமாகவே உள்ளது.

சங்க இலக்கியம் சொல்வதைப் போன்ற சுவர்கள் எதிர்கால அகழ்வாய்வுகளில் மேலும் கிடைக்கலாம். இப்போது தானே கீழடி போன்ற இடங்களைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறோம்.

எனது மதிப்பீட்டில் நான் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு கருத்தை முன்வைத்து வருகிறேன். “சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே” என்பது தான்.

அவ்வகையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் சுட்ட செங்கல் சுவர்களின் பிரமாண்டம் குறித்த சொல்லாடல் கி.மு ஆறாம் நூற்றாண்டை ஒட்டிய காலகட்டத்தின் செங்கல் கட்டிடங்களின் நேர்முக வர்ணனை மட்டுமல்ல; தமிழ்த் தொன்மங்களுக்குள் அதற்கு முந்தைய நெடுங்காலமாக நிலைபெற்று இருந்த ‘செங்கல் பண்பு” (Brick Culture) குறித்த மீள் நினைவுக்குமான சாட்சியமுமாகும்.

புறநானூற்றில் இருங்கோவேள் என்ற வேளிர் தலைவனின் முன்னோர்கள் அவனுக்கு 49 தலைமுறைக்கு முன்பே துவரை என்ற நகரை ஆண்டவர்கள் என்ற மீள் நினைவு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலிலும் துவரை நகரின் சுவர் செம்பால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. செம்பு போன்ற செங்கல் தான் அது என்பது தெளிவு.
ஆனால் இத்தகைய இலக்கிய சாட்சியம், ஆவணங்கள் வடநாட்டு ராஜகிருகம் போன்ற நகரங்களுக்கு இல்லை. சிந்துவெளிப் பண்பாட்டின் பிரமாண்டமான செங்கற் கட்டுமானங்கள் வேத இலக்கியங்கள் உள்ளிட்ட வடமொழி இலக்கியங்களுக்கு தெரியாத ரகசியம்.

"ரிக் வேத காலத்தில் செங்கல் என்ற கட்டுமானப் பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான அகழ்வாய்வுத்தடயமோ மொழியியல் தடயமோ இல்லை" என்று எச். எஸ் கன்வர்ஸ் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். யஜூர் வேதத்தில் இடம் பெறும் ”அக்னி சயனா” சடங்கில் தான் அதுவும் வழிபாடு சார்ந்த பயன்பாட்டுப் பொருளாக செங்கல்லின் பயன்பாடு முதன்முறையாக பதிவுபெறுகிறது என்றும் "சதபாத பிராமணத்தில்" தான் அது முழுமையாக வளர்ச்சி பெற்றது என்றும் அவர் குறிப்பிடுகிறார். பிரிட்ஸ் ஸ்டால் என்ற அறிஞரும் கிட்டத்தட்ட இக்கருத்துடன் உடன்படுகிறார்.

"இஷ்ட்டிகா" என்ற வடசொல்லின் மூலமே "சுட்ட கல்" என்ற தமிழ்ச்சொல் தான் என்ற கன்வெர்சின் கருத்து ஒப்புக்கொள்ளத்தக்கதா இல்லையா என்பதை விடவும் முக்கியமானது சுட்ட செங்கல் தொழில் நுட்பத்தின் உச்சத்தைக் கொண்டாடிய செங்கல் பண்பாட்டின் எச்சத்தை சிந்துவெளிப் பண்பாட்டிற்குப் பின்னர் சங்க இலக்கியங்களில் தான் காணமுடிகிறது என்பது தான்.

குறிப்பாக சுட்ட செங்கல்லும், அதன் உறுதியும் வனப்பும், செம்பு போன்ற அதன் நிறப்பொலிவும் நெடும் பெரும் சுற்றுச் சுவர்களுக்கான அதன் பயன்பாடும் போற்றப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு சான்றாக நிற்பது சங்க இலக்கியம் தான். வேறொன்றுமில்லை.

"சிந்துவெளி காலம் வேறு சங்க இலக்கியம் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்ட தொகுக்கப்பட்ட காலம் வேறு" என்பதை காலண்டர் பார்த்தே சொல்லிவிடலாம். அதற்கு கரிம ஆய்வு கூடத் தேவையில்லை.
இன்றைய தேதியில் இப்போது வரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தான் நாம் வாதிட வேண்டும். அந்த வகையில் கீழடிப்பண்பாடு சிந்துவெளி கட்டுமானங்களின் கருத்தியலோடு தொடர்ச்சி காட்டுகின்றன என்பது தான் முக்கியம். இதை சங்க இலக்கியம் என்ற வழித்துணையோடு வாசிக்கும் போது மேலும் தெளிவு கிடைக்கும். ஆனால் அதற்கு திறந்த மனமும் தரவு சார்ந்த தேடலும் தேவைப்படுகிறது.
எதிர்கால அகழ்வாய்வுகள் தமிழ்த்தொன்மங்களை,நகர வாழ்வியலுக்கான காலகட்டங்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்று இப்போது சொல்லமுடியாது.

ஆனால், சிந்துவெளிச் செங்கல் சுவர்களுக்கும் கீழடிச் செங்கல் சுவர்களுக்கும் அளவால், கால நிர்ணயத்தால் இடைவெளி இருக்கிறது என்றாலும் இந்த இரு சுவர்களுக்கும் இடையிலான தூரத்தை நிரப்பும், விளக்கும் மரபின் தொடர்ச்சிக்கு சங்க இலக்கியம் மட்டும் தான் சான்றாக இருக்கிறது‌ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

”செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை” யாகவும் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பாகவும் நிமிர்ந்து நிற்கிறது தமிழ் போலவே. இதற்கு ஒரு சோற்றுப் பதமாய் வெளிவந்துள்ளன கீழடிச் செங்கல் சுவர்கள்.

சிந்துவெளி விட்ட இடமும்
சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே!

Sunday, 6 October 2019

தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?

தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?
-----------------------------------------------------------------------------
தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான  ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம்.

தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப் பழைமை உடையது. தமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகள், அரிக்கமேட்டு ஆய்வுகள், கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.

தமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின்  தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை தமிழின் சிறப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.

குமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், சிலைகள் எடுப்பதிலும், தோரண வாயில்கள் அமைப்பதிலும், கோட்டங்கள் கட்டுவதிலும், வானவேடிக்கைகள் நடத்துவதிலும் நம் அறிவாராய்ச்சியை இழந்தோம். தமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.

தமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக் கொண்டுள்ளது. சிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க் காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் மொழியின் 247 எழுத்துக்கள் தவிர்த்து கிரந்த எழுத்துக்களும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) தமிழோடு பழகி விட்டன.  கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. இது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுதத் தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை இதுவாகும். தேவநாகரி எழுத்து பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.

கிரந்த எழுத்துகள் என்றால் என்ன?

கிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும்.  வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து. அதன் காலம் தோராயமாக கி.மு 10ஆம் நூற்றாண்டு எனலாம்.  “கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்’ என்பர் மொழிஞாயிறு பாவாணர்.

தமிழகத்தில் வடமொழியை எழுத, வழங்கிய எழுத்தும் தெலுங்கு, கன்னடப் பகுதியில் வழங்கிய எழுத்தும் ஒன்றுபோல இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கிரந்த எழுத்துகளும் தெலுங்கு, கன்னட எழுத்துகளும் தனித்தனியே பிரிந்து வளரலாயின. பல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்துகளைப் பல்லவ கிரந்தம் என்றனர். இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கிரந்த எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியை ஆண்ட பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி வருமிடங்களில் கிரந்த எழுத்துகளே பயன்பாட்டில் இருந்துள்ளது.

ஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியான் மலை கல்வெட்டுகளிலும் வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் உள்ளன. விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர் மன்னர்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு அரசாட்சியில் வட மொழியாளர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் குருநாதர்களாகவும், அரசவையில் அமைச்சர் பதவி வகிக்கும் உயர்பொறுப்புகளிலும் இருந்து வடமொழி வளர்ச்சிக்கு மன்னர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே அரச ஆவணங்களில் கிரந்தம் செல்வாக்கு பெற்றது.

கிரந்த வளர்ச்சியை அறிவதற்கு நாம் சங்க நூல்களையும் அதற்கு முன் இலக்கண நூலாக இருந்த தொல்காப்பியத்தையும் அறிந்தால் தமிழ்மொழியின் சிறப்பில் எப்படி பிறமொழி ஆதிக்கம் கலந்து அதன் சிறப்பபைக் குலைத்தது என்பது புலனாகும். தொல்காப்பியம் தமிழ் எழுத்துகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதிகள் இன்றைய மொழியியல் அறிஞர்களையும் வியப்படையச் செய்கின்றது. அதுபோல் தொல்காப்பியர் காலத்தில் பிற மொழிச்சொற்களையும், எழுத்துகளையும் எவ்வாறு எடுத்து ஆள்வது என்ற வரையறை அமைக்கப்பட்டுள்ளது.

“வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே”

என்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி (ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது. பின்னாளில் கம்பர் காலம் வரை இந்த மரபை நாம் கண்டு உவக்கின்றோம். விபீஷணன் என்பதைக் வீடணன் என்றும் ஜானகி என்பதைச் சானகி (சானகி நகுவள் என்று) என்றும் எழுதும் கம்பனின் மொழியாளுமையை நினைக்கும்பொழுது அவரின் தமிழ்மரபு காக்கும் சிறப்புத்தெற்றென விளங்கும்.

கி.பி.12, அல்லது கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூல் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணம் கூறுமிடத்து வட எழுத்துகள் பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றது (நன்னூல் நூற்பாக்கள்: 146,147148,149). வடமொழியாக்கம் என்று அறிஞர்கள் இதனைக் குறிப்பர். அந்த அளவு நன்னூலார் காலத்தில் வடமொழிச் செல்வாக்குத் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனால்தான் பிற்காலக் கல்வெட்டுகளில் வடமொழியை எழுதும் கிரந்த எழுத்துகளைப் பார்க்கிறோம்.

இந்தக் காலங்களில் எல்லாம் பிற நாட்டுப் படையெடுப்பும், ஆட்சியும், பிறமொழியினரின் ஆதிக்கமும் தமிழகத்தில் இருந்து வந்ததை நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலப் புலவர் ஒருவர் தமிழுக்கு ஐந்தெழுத்து (எ, ஒ, ழ, ற,ன) மட்டும் உண்டு என்று எள்ளி நகையாடிய கதையும் இலக்கிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. (இந்த ஐந்தெழுத்து மட்டும்தான் தமிழுக்கு உரியது என்று புலவர் இகழ்ந்தார். அது புலவர் காலம். இந்த எழுத்து இல்லாமல் கிரந்தத்தை எழுது முடியாது என்று இமணசர்மா குறிப்பிடுகின்றார். இது இந்தக் காலம். இது வடமொழியாதிக்கத்தின் உச்சநிலை என்று கருதவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வடமொழிக்குத் தமிழ்நாட்டுத் திருமடங்கள் ஆதரவளித்தன. தமிழ்ப்புலவர்கள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு வடமொழிப்புலமை இருக்கும் மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வடமொழி நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை பெற்றவர்கள்.

கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?

தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து, அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம். தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது. ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.

அக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார். பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன. தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது. திராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக இருந்தது.

முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர். அதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழைய தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்.

தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியைப் பாதுகாப்பது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரின் கடமையாகும்.

Friday, 4 October 2019

தொல்லியல் அகழாய்வுகள்!

தொல்லியல் அகழாய்வுகள்!
===================================================
தொல்லியல் (Archaeology) என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆர்க்கியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. ஆர்காய்ஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் வழங்கப்படுகின்றது.

நம்முடைய முந்தைய சமுதாயங்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலம் பண்டைய வரலாற்றை மறுபதிவு செய்வதால் தொல்லியல் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டுமே பண்டைய சமுதாயத்தை மனித ஆய்வு செய்கின்றன. கிடைக்கின்ற பழம்பொருட்களைக் கொண்டு மனிதனின் பண்பாட்டை ஆய்வு செய்து வரலாற்றுக்கு மற்றுமொரு ஆய்வு நெறியினைத் தொல்லியல் தருகின்றது.

தொல்லியலில் அகழ்வாய்வு
தொல்லியலில் அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது. இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட தொல்லியல் களம் அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன், இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும்.

அடிப்படை வகை
தற்காலத் தொல்லியலில் இரண்டு வகையான அடிப்படை அகழ்வாய்வு வகைகள் உண்டு:
1. ஆய்வுக்குரிய அகழ்வாய்வு - ஒரு இடத்தில் முழு அளவிலான அகழ்வாய்வைச் செய்வதற்கான நேரமும், இடமும் இருக்கும்போது இவ்வகை அகழ்வாய்வு நடத்தப்படுகின்றது. இது தற்போது, போதிய நிதியையும், தன்னார்வ உழைப்பையும் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வியாளர்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புக்களினால் கைக்கொள்ளப்படுகின்றது. அகழ்வின் அளவு வேலைகள் நடைபெறும் காலத்தில் வேலைகளை இயக்குபவரால் தீர்மானிக்கப்படுகின்றது.

2. வளர்ச்சி சார்ந்த அகழ்வாய்வு - இது தொழில்முறைத் தொல்லியலாளர்களால் செய்யப்படுகிறது. தொல்லியல் களம், கட்டிடச் செயற்பாடு போன்ற வளர்ச்சித் திட்டங்களினால் பாதிக்கப்படும் நிலை வரும்போது இவ்வகை அகழ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்துபவர்களே இவ்வாய்வுக்கான நிதியையும் வழங்குவர். இத்தகைய சூழ்நிலைகளில் நேரம் மட்டுப்பட்டதாக இருப்பதுடன், ஆய்வுகளும் வளர்ச்சித் திட்டத்தினால் பாதிப்புறும் இடங்களை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. வேலையாட்களும் பொதுவாக அகழ்வாய்வு செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர்.

தொல்லியல் அகழாய்வுகள் (Archaeological Excavations)
இந்தியா விடுதலை அடைவதற்கு முன் அலெக்சாண்டர் ரீயா என்பவரால் பெருங்கற்கால தாழிப் பகுதிகள் கொண்ட இடங்களான மதுரை சிற்றூர் பகுதிகளான பரவை மற்றும் அனுப்பானடியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு இப்பகுதியின் தொன்மை உணர்ந்து மத்திய தொல்லியல் துறை 1976 ஆம் ஆண்டில் டி.கல்லுப்பட்டியில் முறையான அகழாய்வினை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை கோவலன் பொட்டல் (1979-80), அழகன்குளம் (1986-87, 1990-91, 1992-93, 1994-95, 1996-67, 1997-98, 2014-15, 2016-17) மற்றும் மாங்குளம் (2006-07) போன்ற பகுதிகளில் அகழாய்வினை மேற்கொண்டது. அந்த அகழாய்வுகளில் வைகை நதி வங்கக் கடலில் கலக்கும் பகுதியில் உள்ள அழகன்குளம் அகழாய்வு முக்கியத்துவம் கொண்டது ஆகும்.

இந்த ஆய்வில் சங்க கால பாண்டிய துறைமுகப் பட்டணமாக அழகன்குளம் விளங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

கீழடியில் தொல்லியல் அகழாய்வுகள் (Archaeological Excavations at Keeladi)
அண்மையில் தமிழர் பண்பாட்டு புகழ் பரப்பி வரும் கீழடி அகழாய்வு பகுதியானது 110 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் அதிக சிதைவில்லாமல் தென்னந்தோப்புகளால் பாதுகாக்கப்பட்டு 9 51’29"" வடக்கு அட்ச ரேகைக்கும், 98 11’69"" கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமையப் பெற்றுள்ள ஒரு தொன்மை நகரிய குடியிருப்பு மற்றும் தொழிற்கூடப் பகுதி ஆகும்.

தமிழகத்தின் ஒரு கோயில் நகரமாக திகழும் மதுரை நெடுஞ்சாலை வழியே கிழக்கு தென்கிழக்காக 13 கி.மீ. தொலைவில் கீழடி அமைந்துள்ளது. கீழடி அகழாய்வுப் பணி இடத்தின் வடக்கே 2 கி.மீ. தொலைவில் வைகை ஆறு செல்கிறது. கிழக்கு பகுதியில் உள்ள மணலூர் கிராமத்தின் வடக்கில் ஒரு கண்மாய் அமைந்துள்ளது.

வட கிழக்கில் உள்ள இயற்கை நீர்நிலை காட்சியளிக்கின்றது. இது போலவே அகரம் என்னும் ஊர் கீழடியின் தென்கிழக்கே அமைந்துள்ளது. மேற்கே கொந்தகை என்னும் ஊர் ஓர் எல்லையாக விளங்குகிறது. இவ்வாறு சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் ஊரணிகள், கண்மாய்கள் என இயற்கை அரண்களாக பெற்று வரலாற்று தொடக்க கால முதல் சமகாலம் வரை மனித வாழிடத்திற்கு உகந்ததாக திகழ்கிறது.

முந்தைய ஆண்டுகளில் ( 2014-15, 2015-16 மற்றும் 2016-17) இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறையில் அகழாய்வு பிரிவு, பெங்களூர் பிரிவு அகழாய்வு மேற்கொண்டது. கீழடியின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை தமிழக அரசு தொல்லியல் துறை முறையே 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தி வருகிறது. இந்த அகழ்வாய்வுகளில் இப்பகுதியில் புதைந்துள்ள கட்டடப்பகுதியையும், அரும்பொருட்களையும் வெளிக்கொணரும் வண்ணம் பெரும்பரப்பு அகழாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. ஐந்தாம் கட்ட கீழடி அகழாய்வானது முறைப்படுத்தப்பட்ட முறையில் நேர்த்தியுடன் நடந்து வருகிறது. கீழடி அகழாய்வின் முதன்மைத் தரவுகள் (2017-18) நான்காம் கட்ட அகழாய்வில் 5820 அரும்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவையாக காணப்படுகின்றன.மேலும், அரும்பொருட்களும் விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செப்பு பொருட்கள், இரும்பு கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள் வட்ட செல்கள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணி கற்கள் (அகேட் சூதுபவளம், ஸ்படிகம்) அக்கால மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்) ரௌலட்டட் மட்பாண்டங்கள் அரட்டின் ஓடுகள் ஆகியனவும் வெளிக் கொணரப்பட்டன.

பெரும்பாலான மட்பாண்டங்களில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்பட்டன. இவை சுடுவதற்கு முன்பும் பின்பும் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவ்வகழாய்வில் கணிசமான எண்ணிக்கையில் (50க்கும் மேற்பட்ட) தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் வாயிலாக கீழடி பகுதியில் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்ததும், இப்பகுதி மதுரையின் கிழக்கு திசை நீட்சியாக விளங்கியிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.

எனவே, கீழடியில் மறைந்துள்ள தொல்பொருட்களை வெளிக்கொணர வேண்டியது காலத்தின் தேவை என்பதை கருத்திற்கொண்டு வரும் காலங்களில் தமிழ் சமுதாயத்தில் தொன்மை மிக்க பண்பாட்டு செல்வங்களை வெளிக்கொணரும் வகையில் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன.

கீழடி அகழாய்வின் முதன்மைத் தரவுகள் (2017-18) (Key Findings – Keeladi Excavation)
நான்காம் கட்ட அகழாய்வில் 5820 அரும்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவையாக காணப்படுகின்றன.

மேலும், அரும்பொருட்களும் விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செப்பு பொருட்கள், இரும்பு கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள் வட்ட செல்கள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணி கற்கள் (அகேட் சூதுபவளம், ஸ்படிகம்) அக்கால மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்) ரௌலட்டட் மட்பாண்டங்கள் அரட்டின் ஓடுகள் ஆகியனவும் வெளிக் கொணரப்பட்டன.

பெரும்பாலான மட்பாண்டங்களில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்பட்டன. இவை சுடுவதற்கு முன்பும் பின்பும் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவ்வகழாய்வில் கணிசமான எண்ணிக்கையில் (50க்கும் மேற்பட்ட) தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் வாயிலாக கீழடி பகுதியில் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்ததும், இப்பகுதி மதுரையின் கிழக்கு திசை நீட்சியாக விளங்கியிருக்க என்பதும் புலனாகிறது.

எனவே, கீழடியில் மறைந்துள்ள தொல்பொருட்களை வெளிக்கொணர வேண்டியது காலத்தின் தேவை என்பதை கருத்திற்கொண்டு வரும் காலங்களில் தமிழ் சமுதாயத்தில் தொன்மை மிக்க பண்பாட்டு செல்வங்களை வெளிக்கொணரும் வகையில் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழகத்தில் நிலவிய சங்ககால பண்பாட்டு வரலாற்றாய்வில் ஒரு திருப்புமுனை
(A turning point in the cultural historiography of sangam Age)

பழந்தமிழர் பண்பாட்டின் சிறப்பம்சங்களை உலக அரங்கில் நிலை நிறுத்தும் நோக்கோடு, தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறை, கீழடி அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களைப் புகழ்பெற்ற அறிவியற்கூடங்களுக்கு அனுப்பி ஆய்வு முடிவுகளைப் பெற்றுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட ஆய்வு முடிவுகளைத் தொல்லியல் அறிஞர்கள் கொண்ட குழு ஆராய்ந்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. அதன் சிறப்புக்கூறுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி பண்பாடு (Keeladi 2600 years old culture)
கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போதுசேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டன. பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580 என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. இக்காலக்கணிப்பின்படி, கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.

இந்த ஆய்வு முடிவுகளைக் கவனமாக ஆய்வு செய்த பிரபல தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.இராஜன், பழந்தமிழரின் தொன்மை தொடர்பாக இதுவரை நிலவி வந்த சில கேள்விகள் மற்றும் கருதுகோள்களுக்கு உறுதியான விடைகள் / சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன என்று கருதுகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் நகரமயமாதல் கி.மு.3-ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் தொடங்கியது என இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலிருந்து, தொடங்குகிறது என்பது தெளிவாகிறது.

இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதுவரை தமிழ்-பிராமி எழுத்துவடிவத்தின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் அகழாய்வுகளின்படி கருதப்பட்டு வந்தது.

எனினும், தற்போது கிடைத்திருக்கும் கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான காலக்கணிப்புக்கள் தமிழ்-பிராமியின் காலம் மேலும் நூறாண்டுகள் (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு) பழமை வாய்ந்தது என்னும் முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. எழுத்து பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைக்க பெற்றுள்ளதின் மூலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்த முடிகிறது. எழுத்தறிவு தொடங்கிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. இக்கருத்தாக்கதில் பெரும் மாற்றத்தை கீழடி ஆய்வு முடிவுகள் ஏற்படுதியுள்ளன என்றால் மிகையாகாது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதற்கட்ட பழையகற்கால (Lower Palaeolithic) கருவிகள் 15 இலட்சம் ஆண்டுகள் என்றும், இரண்டாம் கட்ட பழையகற்கால (Middle Palaeolithic) கருவிகள் 3,85,000 ஆண்டுகள் பழமையானது என்றும், கற்கருவிகளை காசுமோசெனிக்-நியூக்லைட் எனப்படும் இயலுலக புவிபரப்பியல் ஒளி ஆய்வு (Cosmogenic-Nuclide Burial Dating Method) செய்ததில் இக்கால முடிவுகள் பெறப்பட்டன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போன்று நுண்கற்காலத்தைச் (Microlithic / Mesolithic Period) சேர்ந்த கற்காலக் கருவிகள் திருநெல்வேலிப் பகுதியிலும், வைகை மற்றும் குண்டாறு ஆற்று படுகைகளிலும், புதிய கற்காலப்  பண்பாடுகளின் கருவிகள் தமிழகத்தின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கிடைத்துள்ளன. அதன் அடுத்தக் காலக்கட்டமான இரும்புக் காலத்தைச் சார்ந்த சேலம் வட்டாரத்திலுள்ள மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஊரிகளிலுள்ள பெருங்கற்படை ஈமச் சின்னங்களில் கண்டறியப்பட்ட மாதிரிகளிலிருந்து இரும்புக் காலம் கி.மு. 2000 என காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி அகழாய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட கரிமம் காலக் கணக்கீடு செய்யப்பட்டதில் இதனின் காலம்கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்று வரையரை  செய்யப்பட்டுள்ளது. தற்போது கீழடி அகழாய்வில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம பகுப்பாய்வுகளின் முடிவுகள் கீழடியின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்று தெரிய வருகிறது.

அண்மைக்கால அகழாய்வுகளும், அறிவியல் ரீதியான காலகணிப்புகளும், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 இலட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், தற்போதைய கீழடி ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் தொடக்க கால வரலாறு காலத்தில் (Early Historic Period) கி.மு. 6-ஆம் நூற்றாண்டளவில் மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்பது உறுதியாகிறது.

Monday, 25 February 2019

யாழ்ப்பாண பேச்சு வழக்கு

யாழ்ப்பாண பேச்சு வழக்கு

யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே.

மெய்யே!

இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம்.

கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது.

இவர்கள் காணவர்மாரை இஞ்சரும்! இஞ்சருங்கோ! என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்ததும் இஞ்சரும் அப்பா! இஞ்சருங்கோ அப்பா என அது பதவிப் பெயர் கொண்டழைக்கப்படும் வழக்கு இன்றும் இருக்கிறது.(இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ…. என்று ஒரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.)

அதற்கு, என்ன சங்கதி? என்றவாறு கணவர்மாரின் பதில் கேள்வி ஆரம்பமாக இப்படியாகச் அவர்களின் சம்பாஷனைகள் தொடரும். ஆனாலும் கணவர்மார் மனைவிமாரின் பெயரைச் சொல்லியோ அன்றேல் அவர்களின் செல்லப்பெயர் / வீட்டுப் பெயர்களைச் சொல்லியோ (பொதுவாக கிளி, ராசாத்தி, செல்லம், குட்டி, …இப்படியாகச் செல்லப் பெயர்கள் இருக்கும்)அழைக்கும் வழக்கு இருக்கிறது.

என்றாலும் இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு. கணவன்மாரை மனைவிமார் மெய்யே! மெய்யே!! (உண்மையே! உண்மையே!)என்று கூப்பிட்டதனால் போலும் நீங்களும் நாங்களும் பிறந்திருக்கிறோம்!!

பறை

பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் “பறை” எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் “பறைதல்” என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் “பறையர்” என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் “பறை” எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில…

“பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்

பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே


“பறைசாற்றுதல்” எனும் சொல்லும் “பறை” எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பல சொல்லாடல்கள் உள்ளன. இவை இன்றும் யாழ்ப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த “பறை” எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை “பறையன்”, “பறையன் போன்று” எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்

தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த “பறை” எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)


இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை  தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே “வகே” எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் “வகை” எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்

அதேவேளை “பறை” எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற” என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான “பறையர்” எனும் தமிழ் சொல், சிங்களத்தில் “பெறவா” என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த “பெறை” இசைக்கருவியை அடிப்பவர்களை “பெறக்காரயா” என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்
பறை > பறை > பெறை > பெற
பறையர் > பறையோ > பெறவா
பறை அடிப்பவர் > பெறக்காரயா


தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த “பறை” எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் “பெறக்காரயா” என்பதில் உள்ள “காரயா” எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள “காரன்” எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட “பறை” எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த “Pariah” வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சு

குஞ்சு என்றால் “சிறிய” அல்லது “சிறியது” என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை “குஞ்சு” என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

“குஞ்சு குருமன்கள்” என்பதும் “சின்னஞ் சிறிசுகள்” அல்லது “சின்னஞ் சிறியவர்கள்” எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் “என்ட செல்லம்“, “என்ட குஞ்சு” என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.

உறவுமுறைச் சொற்கள்

யாழ்ப்பாணத் தமிழரிடையே “குஞ்சு” என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை “குஞ்சையா“, “குஞ்சியப்பு“, “குஞ்சையர்” போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.

சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்


தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; “குஞ்சம்மா”, “குஞ்சாச்சி” என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.

சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி


சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; “குஞ்சித்தம்பி”, “சின்னக்குஞ்சு” என அழைக்கும் வழக்கும் உள்ளது.

சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு


மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் “குஞ்சு” எனும் சொற்பதம் “சிறிய” எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.

துலைக்கோ, கனக்க, வயக்கெட்டுப் போனியள்!

* ”அண்ணை! துலைக்கோ போறியள்?”, “துலைக்கோ போட்டு வாறியள்”, இதில ‘துலை’ என்பது ‘தொலை தூரம்’ எண்டதில இருந்து வந்திருக்கும் என நினைக்கிறேன்.

* “கண்டு கனகாலம்”. இதுல ‘கனகாலம்’ என்பது அதிக காலம் என்பதைக் கூறிக்குது. ‘கனக்க’ நிறைய/அதிக என்றாகிறது. “இதையும் கொண்டு போங்கோ. இங்க கனக்கக் கிடக்கு”. ‘கனக்க’ என்பது ‘கனதியான’ எண்டதில இருந்து வந்திருக்குமோ?

* ”எப்ப கொழும்பாலை வந்தனீங்கள்? நல்லா வயக்கெட்டுப் போனியள்”. இதுல வயக்கெட்டு எண்டது, ‘மெலிந்து’ எண்டதைக் குறிக்குது. ‘வயக்கெட்டு’ எண்டது ‘வயசு கெட்டு’ எண்ட அர்த்ததில் வருமோ? வயசு போனால் மெலிந்து சோர்வது இயல்புதானே என்பதால் இருக்கலாம்.

இளந்தாரிப் பெடியள், குமர்ப் பெட்டையள்

“ஊரில் ஒரு குமர் தனியனாப் போக வழியில்லை, சந்தியிலை நிண்டு இளந்தாரிப் பெடியள் அவளவையை சைற் அடிக்கிறாங்கள்”

ஈழத்து ஊர்களில் மேற்கண்ட சம்பாஷணையை ஊர்ப் பெரியவர்கள் வாயிலிருந்து விழக் கேட்கலாம். அந்த வாக்கியத்தில் வந்த இளந்தாரி என்பது கட்டிளம் காளை என்ற சொற்பதத்திற்கு நிகரானது. காதல் வயப்படுகின்ற பருவம் என்பது இன்னும் நெருக்கமான அர்த்தம் கொள்ளத்தக்கதாக அமையும். பெடியள் என்பது தமிழகத்தில் பொடியன் என்று புழங்கும் சொல்லுக்கு நிகரான அர்த்தம் கொண்டு அமையும்.

இளவட்டப் பொண்ணு, குமரிப் பெண் என்று அர்த்தம் கொள்ளும் சொற்பதமே ஈழத்துப் பேச்சு வழக்கில் அர்த்தப்படும் “குமர்ப்பெட்டை“. பருவமடைந்த பெண்களை இங்கே அர்த்தப்படுத்தி அழைப்பதுண்டு. முன் சொன்ன இளந்தாரிக்கு பெண் பால் அர்த்தமாகவும் இது அமையும்.

ஆக்கினை விழுந்த வேலை

ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ, அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ, என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம். நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருக்கிறார்கள், அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள், அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கும் போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு பாருங்கோ, வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவாறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் “ஆக்கினை விழுந்த வேலை” என்பதை “ஆக்கினை பிடிச்ச வேலை” என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு. எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல். இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம். என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது, இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

குடுதேனோ– கொடுத்தேனோ எங்கடை– எங்களுடைய
நினைவுவரேக்கை– நினைவு வரும்பொழுது

தீர அயத்துப்போனன்

பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?” எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா, என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும். ”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும், இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம். அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான், காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,

இங்கு முத்தம்– முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,

ஒரு நாள் பொழுது

எணேய் அம்மா, இவன் தம்பி இன்னும் நித்திரையாலை எழும்பேலை.. பக்கத்து வீட்டில பொங்கும் பூம்புனல் கேட்குது… பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுதணை…

நான் வாறன் இப்ப.. உவனுக்கு மோனை கொஞ்சம் தண்ணி, வாளியோடை கொண்டே ஊத்தினனெண்டா எல்லா நித்திரையும் இப்ப போகும்.. சரி மோனை கொப்பர் எங்கே போட்டார்?

அப்பு ஆலங்குச்சி எடுக்கவெண்டு சந்திக்குப் போனவர்.. இன்னும் காணேலை…

இண்டைக்கு பல்லு விளக்கின மாதிரித்தான். உந்த மனிசனுக்க கதை கண்ட இடம் கயிலாயம் தான்… அங்கை ஆரும் ஓசியிலை பேப்பர் பாக்க வந்திருப்பினம், பின்னை சமா வைக்கினமாக்கும் என்று புறுபுறுத்தாள்..

தம்பி அப்பத்தான் நித்திரையால எழும்பி வாறான்.. எட தம்பி கொப்பர் ஆலங்குச்சி எடுக்க போனவர். சீமான் வரக் காணேலை. ஒருக்கா உந்த சின்னக் காலாலை ஓடிப்போய் குச்சியை கொப்பரிட்டை வாங்கி பல்லை மினிக்கிக் கொண்டு தோட்டத்திலை மிஸின் றைக்குது. அதிலை குளிச்சிட்டுவா பவுண்.

வந்த மணியிடம், கொப்பருக்கு கொஞ்சம் பழஞ்சோறு கிடக்கு… உனக்கு கொஞ்சம் ஒடியல் புட்டு அவிச்சனான் .. மாங்காயும், நேற்று அவிச்சு வைச்ச நெத்தலி மீனும் போட்டனான். கெதிபண்ணி சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடு மோனை. உன்ரை கூட்டாளி நீ குளிக்கப் போனாப்போலை வந்தவன். மினைக்கெட்டால் வாத்தியிட்டை இண்டைக்கு பூசை தான் எண்டிட்டு போட்டான்.

அம்மா நாலுறூள் கொப்பி வேண்டி வரச் சொல்லி ஆங்கிலப்பாட வாத்தி சொன்னவர். காசு தாவணெணை. அடுப்படி மட்டை வரிக்கடிலிலை ஒரு தகரப்பேணி கிடக்கு.. அதுக்கை சின்ன மடிலேங்சிக்கை சீட்டுக்காசு கிடக்கு.. அதிலை 2ருபாயை எடன் முருங்கையில கொஞ்ச காய் ஆயலாம் . தேசிக்காயும் கிடக்கு… சந்தையிலை குடுத்திட்டு எடுத்த காசை வைப்பம்.

பள்ளிக்கூடத்தில்

டேய் மணி நேற்று தந்த வீட்டுப்பாடம் செய்து போட்டியே?

இல்லயடா.. நேற்று ரா தோட்டவெளியில அரிச்சந்திரன் கூத்து ஆடினவங்கள் அதுதான் பார்க்கப் போனன். அயத்துப்போனனடா.

சரியடா நான் செய்தனான். கெதியா பார்த்து எழுது.

வாத்தியார் வாரார். வணக்கம் ஐயா. எல்லாரும் இருங்கோ. ஏன் வகுப்புக் கூட்டேலை. கூட்டு முறையாள் வரேலை ஐயா. நல்ல சாட்டு.. சரி எல்லாரும் முழங்காலிலை வெளியிலை நில்லுங்கோ. இண்டைக்கு இந்தப்பாடம் நடத்தேலாது.

வெளில வந்த அதிபர், ஏன் வெளியிலை நிக்கிறியள் என்று கேட்க கணக்கு வாத்தியார் நிப்பாட்டிப் போட்டார் ஐயா.. வகுப்புக் கூட்டேல எண்டு..

சரி.. சரி.. வகுப்பைக் கூட்டிப்போட்டு இருங்கோ. இனிமேல் உப்பிடிச் செய்யக்கூடாது.

மூன்றரை மணியளவில்… பள்ளிக்கூட மணி அடிக்க தேவாரம் பாடி முடிச்சு பொடியள் வெளியே வருகினம். மணி இண்டைக்கு தோட்ட வேலிக்கு கதியால் போடவேணும். வீட்டை வாறியே?. போடா நான் எங்கடை தோட்டத்துக்கு வெருளி கட்டவேணும். கிளியள் எல்லாம் தோட்டத்திலை காய்களை எல்லாம் சிதிலப்படுத்துதுகள்.

வீட்டை வந்தான் மணி..

தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…

சரி சரி.. சாப்பாட்டை போட்டுத் தா கெதியா.. விளையாடப் போக வேணும்…

நீயே போட்டுச் சாப்பிடு… அம்மா வரட்டும். அவாட்டை ரண்டு வக்கணை வேண்டித் தாரன். அப்ப சரிவரும் உன்ர வாய்க்கு,.

கண்ணன் வாறான். டேய் மணி.. நாளைக்க திருவிழாவிலை பொம்மலாட்டம் வருகுதாம். நான் போகப்போறன்.

ஏன்டா சின்ன மேளம் இல்லையே?

சின்ன மேளம் வர 3மணியாய் போம். வாணவெடியும் அப்பத்தானே போடுவங்கள். 3மணிக்குப் பிறகு சின்னண்ணணோடையும், பெடியளோடையும் போவம்.

அப்பத்தான் அங்க வந்த அம்மா.. கண்ணனைக் கண்டிட்டு, மருமேன் ஒருக்கா மறக்காமல் கொப்பரட்டைச் சொல்லு வீட்டை வரட்டாம் எண்டு. கனக்க கதைகிடக்கு.

சரி மாமி… சொல்லி விடுறன்.. நாங்கள் திருவிழாக்கு போட்டு வாறம்…

பொருள் விளக்கம்:

எணேய் – வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது

மோனை – வயதானவர்கள் சிறியவர்களை , பிள்ளைகளை அழைப்பது

கொப்பர் -முன்னால் நிற்பவரின் தகப்பனை அழைப்பது

சமா – நிறைய நபர்கள் சேர்ந்து கதைப்பது

புறுபுறுத்தல் – வாய்க்குள் சத்தம் வராமல் தானே ஏசுவது.

சீமான் – மரியாதைக்கும், நக்கலுக்குத் அதை சொல்வார்கள். செல்வந்தர் என்பது பொருள்.

மினைக்கெட்டால் – நேரத்தை விரயம் செய்தால்

பூசை – அடிப்பது

மடிலேஞ்சி – பணம் வைக்கும் சிறிய கை பை(Purse)

ரா -இரவு

அயத்துப்போனனடா – மறந்துபோதல்

கெதியா – விரைவாக

பொடியள் -பிள்ளைகள்.

கதியால் – மரத்தில் இருந்து வெட்டிய கிளைகள்

சிதிலப்படுத்துதுகள். – பழுதுபடுத்துவது.

புசல்மா – முகத்திற்கு போடும் பவுடர். குட்டிகுரோப் அப்போது பிரபலமானது.

சின்ன மேளம் – கோவிலில் குழுவாக நடனமாடும் பெண்கள். சினிமா பாட்டுக்கு ஆடுவார்கள்.

கனக்க – நிறைய

செட்டாக – நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி – அகில்

பொறுக்கி – கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் – மாமா

பொடியன் – பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி – புத்திமதி

கேளான் – கேட்க மாட்டான்

சொச்சமாக – கிட்டத்தட்ட

கொட்டுண்டு – சிந்துப் பட்டு

ஆய்ந்து – பிடுங்கி

காணன் – காணவில்லை

வீபூதி – திருநீறு

பள்ளி – பாட சாலை

சர்வகலாசாலை – பல்கலைக் கழகம்

குருத்துகள் – இளம் பிள்ளைகள்

புலவு – தோட்டம்

முதுசம் – பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி – புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் – கவலையீனம்

கதியால் – வேலி

காம்புக் சத்தகம் – ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் – குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு – ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை – முயற்சி

புளுக்கொடியல் – பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி – பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் – வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி – பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் – புறுபுறுத்தல்

பூராடம் – விடுப்பு,விண்ணாணம்

கோடி – கொல்லைப் புறம்

பொட்டு – வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை – உன் மீது ஆணையாக

எப்பன் – கொஞ்சம்

வளவு – காணி

சவர் – உப்பு

எல்லே – அல்லவா

ஏலாது – முடியாது

மே(மோ)ள் – மகள்

பாவாடை – முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் – இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் – கோவிக்கப் போகிறாள்

போகேக்க – போகும் போது

களு நீர் – சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் – வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி – பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அண்ணாந்து – மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் – ஆர்ப்பரிப்பு

மணிக்காய் – குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய் – கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன் – மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த –இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு – “அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

1. இல்லுபோலை/ எல்லுபோலை:இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு – இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை.

6. அரக்கி (வினை சொல்லாய்??):ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது,

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்
8. ஏதனம்: சமையல் பாத்திரங்கள்

“யாழ்ப்பாண பேச்சு வழக்கு”

அம்மாடியோவ்! எத்தனை தகவல்கள்!
இப்படி ஒரு விபரமான இணையம் இன்றுதான் என் கண்ணில் பட்டது. அதுவும் தற்செயலாக.
பரவலாகவும், இலகுவிலும் இவ்விணைய விடயங்கள் வெளிப்படக் கூடியதாக இருக்க ஆவன செய்தால் யாவருக்கும் நன்மை – எமக்குப் பெருமை.
வாழ்த்துக்கள்!